பாரிஸ் ஒலிம்பிக்: பருவ நிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் வீரர்கள்...

பாரிஸ் ஒலிம்பிக்: பருவ நிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் வீரர்கள்...
Published on
Updated on
2 min read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், 33 வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்‌ போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக பிரான்ஸ் அரசு சார்பில் விளையாட்டு கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பயிற்சியாளர்கள், அதிகாரிகள், நடுவர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் இந்த விளையாட்டு கிராமத்தில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும், சாப்பிடுவதற்கும், உடற்பயிற்சி செய்வது உள்பட சகல வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் பிரான்ஸ் அரசும் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகமும் என்ன நினைத்ததோ தெரியவில்லை, தங்கும் அறையை மிகவும் வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறது. அதாவது அறைக்கு அடியில் தண்ணீர் குழாய் பதித்து அதன் வழியே தண்ணீர் செல்வது போலவும், அதில் காற்றாடிகள் பதித்து ஏசி வருவது போலவும் குளிரூட்டப்பட்டு உள்ளது.

விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேக ஏ.சி. அறைகள் எதுவும் செய்து தரப்படாமல் இவ்வாறு இயற்கை முறையிலேயே உருவாக்கப்பட்டிருப்பது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் பிரான்ஸில் தற்போது எதிர்பார்த்தபடி சீதோஷ்ண நிலை இல்லை. அதிக பட்சம் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாகி வருகிறது. திடீரென மழை மேகம் சூழ்ந்தும், திடீரென வெயில் சுட்டெரித்தும் காணப்படுகிறது.

இந்த கால நிலை மாற்றங்களினால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் பகுதிகளை சுற்றி வெப்பத்தை மட்டுப்படுத்துவதற்கு செயற்கையாக நீர் தெளிக்கும் கருவி மூலம் தண்ணீரை தெளித்து குளிர்ந்த சூழலை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீரர்கள் தங்களது முழு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றால் நல்ல உடற்பயிற்சியும் ஓய்வும் அவசியம். தங்கும் அறையிலும் குளிர்சாதன வசதி இல்லாததால் வீரர்கள் சரியான தூக்கம் இன்றி அசெளகர்யமாக உணர்வதாகவும் செய்திகள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து வீரர்களின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 2,500 ஏ.சி. இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்றன. ஆனபோதும் அங்கு வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தனது அறையில் ஏசி இல்லை எனவும், மிகவும் வெப்பமாக இருப்பதால் அங்கே உறங்க முடியவில்லை எனவும் இத்தாலி நாட்டு வீரர் தாமஸ் செக்கோன் தெரிவித்திருந்தார். இத்தாலி சார்பில் தங்கப்பதக்கம் வென்ற இவர், ஒய்வு நேரத்தில் வெயிலில் இருந்து தப்பிக்கை இயற்கை அன்னையின் மடியில் தலை சாய்வதை போல பூங்காவின் மரத்தடிக்கு தஞ்சம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த சில நாட்களில்தான் தடகள போட்டிகளும் நடக்கிறது. சரியான பயிற்சி மற்றும் ஓய்வு இல்லாவிட்டால் பல வழிகளில் வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. களத்தில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த இயலாது என்பதால் ஒலிம்பிக் கமிட்டியும் பிரான்ஸ் நாட்டு அரசாங்கமும் விரைந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் கோரிக்கை ஆக உள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com