மதுரை மாவட்டம் விரகனூர் அருகே உள்ள எல்.கே.டி. நகரில் வசித்து வருபவர் ஹரிபாபு. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஆகாஷ் மற்றும் அசோக் என இரண்டு மகன்களும் உண்டு.
தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்த ஹரிபாபுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது.
அவ்வப்போது இருவரது குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு எழுந்து வந்த நிலையில், ஹரிபாபுவின் மகன்களை குபேந்திரன் தாக்கியதாக கடந்த 2023 நவம்பரில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த குபேந்திரன், ஹரிபாபுவின் குடும்பத்தினரை விதவிதமாக பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு நாளும் ஹரிபாபுவின் வீட்டின் முன்பு எச்சில் இலை, குப்பைகள், மலக்கழிவுகளை கொட்டுவது, கார் மீது கழிவு நீர் ஊற்றுவது என தொடர்ந்து நடந்துள்ளது.
இதுகுறித்து குபேந்திரனிடம் கேட்டதற்கு, நான் செய்யவே இல்லை என சத்தியம் செய்திருக்கிறார். இதையடுத்து குபேந்திரனின் சேட்டைகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தால்தான் சரிவரும் என முடிவெடுத்தவர், வீட்டின் வாசலில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான சிசிடிவி ஆதாரங்களைத் திரட்டிய ஹரிபாபு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து புகார் மனு அளித்தார். அந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஹரிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பயங்கர வெறுப்புடன் இருந்து வந்த குபேந்திரன், நாள்தோறும் விதவிதமான வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
இரவு நேரங்களில் கழிவுநீரை ஹரிகுமாரின் கார் மீது ஊற்றியவர், வீட்டு வாசலில் குப்பைகளை எறிவதும், அழுகிய முட்டையை வீசுவதும், சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்புவதுமாய் இருந்துள்ளார்.
மேலும் வருகிற போகிறபோதெல்லாம் கார் மீது டமார் என அடித்து விட்டுச் செல்வது குபேந்திரனின் வழக்கமாகியிருக்கிறது.
ஏற்கெனவே குபேந்திரன் மீது சிலைமான் காவல் நிலைய போலீசார், 294(பி), 427, 506 (1) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹரிபாபு காவல்துறையை நாடியிருக்கிறார்.
முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவரை பழிவாங்குவதற்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.