தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து, ஒரு மாதம் கடந்தும் எதிர்கட்சி துணை தலைவர், கொறடாவை அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கவில்லை.
இதனால் நேற்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டார்.
இதே போல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூவும் செயலாளராக கே.பி அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டதே பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு காரணம் கடந்த வாரம் வரை இந்த பதவியை பன்னீர்செல்வம் ஏற்க மறுத்தே வந்தார். எனக்கு அரசு பதவி எதுவும் வேண்டாம் கட்சி பதவி மட்டும் போதும் என்ற முடிவில் தான் இருந்தார். ஆனால் பன்னீர்செல்வத்துக்கு இந்த பதவியை கொடுத்தே தீரவேண்டும் என்பதில் எடப்பாடி ஒரு முடிவோடு இருந்திருக்கிறார்.
ஒருவேளை பன்னீர்செல்வம் அரசு பதவியை ஏற்காவிட்டால் தான் கட்சி பதவியை விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்படலாம் என்று எடப்பாடி கருத்தியதாலே அவருக்கு வலுக்கட்டாயமாக இந்த பதவியை கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்ததாலே பன்னீர்செல்வமும் இந்த பதவியை ஏற்க மறுத்துள்ளார்.
எடப்பாடி எப்படியும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்க, இந்த பதவியை ஏற்காவிட்டால் சட்டசபையில் புரோட்டாகால்படி பின்வரிசையில் பன்னீர்செல்வம் அமர வேண்டியது வரும் என்றும் பன்னீருக்கு சொல்லப்பட்டுள்ளதாம். மேலும் எடப்பாடியுடன் தொடர்ந்து மோதவேண்டாம் அதற்குரிய பலம் தனக்கு இல்லை என்றும் இந்த பதவியை ஏற்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பதவியை ஏற்றதன் மூலம் எடப்பாடிக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்திலே இருக்க பன்னீர்செல்வம் முடிவு செய்து விட்டதாகவும், ஒருவேளை சசிகலா அதிமுகவில் வந்தால் அதன்பின்னர் எடப்பாடியை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் முடிவெடுத்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.