
2000-ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் பங்கேற்று மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஐஸ்வர்யா ராய் போல இந்திய சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடைவார் என கணிக்கப்பட்ட நிலையில், தமிழில் தமிழன் படமே இறுதியாய் அமைந்தது. பின்னர் இந்தி திரையுலகம் சென்றவர், அடுத்து கோலிவுட் பக்கமே தலைக்காட்டாமல் இருந்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின்னர் 2018-ம் ஆண்டு பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சிட்டாடல் என்ற வெப்சீரிஸில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்தன. கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
தற்போது தி ஃப்ளஃப் என்ற படத்தில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது கழுத்து மற்றும் கைகளில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரியங்கா சோப்ராவுக்கு என்னவானது என கேள்விகளை கமெண்டுகளில் போட்ட நிலையில், பிரியங்கா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
என் வேலைகளில் உள்ள தொழில்முறை அபாயங்கள் எனவும் வீடியோவில் பதிவிடப்பட்டிருந்தது. 19-ம் நூற்றாண்டில் கரீபியன் பகுதியில் நடைபெறும் கதையாக தி ப்ளஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கடற்கொள்ளையராக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டபோது உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைகளில் பிளேடால் கிழிக்கப்பட்டும், கழுத்து வாய், மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், பிரியங்கா சோப்ரா அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சினிமாவுக்காக இப்படியெல்லாம் உயிரை பணயம் வைத்து நடிக்க வேண்டுமா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.