

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அடாவடி வசூல் செய்யப்படுவதாக பக்தர்கள் குமுறி வருகின்றனர். நேர்த்திக் கடனை செலுத்த வருபவர்களிடம் கோயில் நிர்வாக ஊழியர்கள் செய்த வேலை என்ன?
உலகப்புகழ் பெற்ற சக்தி தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறியதற்காகவும், நிறைவேறுவதற்காகவும் பக்தர்கள் மொட்டையடித்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி வருவர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கென்றே கோயில் நிர்வாகம் தனி மண்டபம் கட்டியுள்ளது. இலவசமாகவே முடி காணிக்கை செலுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே மண்டபம் கட்டி பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
ஆனால் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களிடம் முடிக்காணிக்கை மண்டபத்தில் வேலை செய்வோர் ஒரு மொட்டைக்கு 100 ரூபாய் தருமாறு அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
கோயில் நிர்வாகத்திடம் ஒரு முறை பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்கி வந்த பிறகும் மீண்டும் ஏன் பணம் தர வேண்டும் என பக்தர்கள் கேட்டால் வேறு யாரிடமாவது மொட்டையடித்துக் கொள்ளுங்கள் என்று கறார் காட்டுவதாகவும் பக்தர்கள் புலம்புகின்றனர்.
அதே நேரம் உயிருக்கு ஆபத்து இல்லாதவாறு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்கு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை என மொட்டையடிப்பவர்கள் கேட்கும் பணத்தை முழு மனதின்றி கொடுத்துவிட்டு புலம்பியவாறே செல்கின்றனர் பக்தர்கள்.