முதல் பெண் ஆசிரியர்
சாவித்ரி பாய் புலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இவர் வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பும் போது தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு செல்வார். ஏனெனில், அவர் தெருவில் இறங்கி நடந்தால், வழி நெடுகிலும் உள்ள ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி அவர் மீது வீசுவார்கள். அவற்றையெல்லாம் அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக் கொள்வார் சாவித்ரி.
பெண் கல்வியின் அவசியம்
அவர் செய்த குற்றம் தான் என்ன? பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அவர்களுக்கு கல்வி கற்பித்தார். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினார். அனைவரும் சமம் என்று சொல்லி மனிதத்தை தூக்கிப் பிடித்த அவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆவார்.
மராட்டிய மாநிலத்தில் 1831ஆம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் பூலேவை திருமணம் செய்து கொண்டார். ஜோதிராவ் பூலேவும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ்.பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ்.மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்க வைத்தனர். 1848ம் ஆண்டு ஜோதிராவ் பூலேவும், சாவித்ரி பாயும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். மேலும், பெங்களுக்கென 1863ஆம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர். கல்வி பணியோடு நில்லாமல் கணவன் மனைவி இருவரும் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.
சமுதாய சீர்திருத்தப்பணி
சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்கள் மற்றும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர், குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் என அனைத்து சமுதாய சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.
இந்தப் புரட்சிகர செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல, மாறாக சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை கேட்டனர். எங்கும் சென்றாலும் கல்வீச்சு ஆனால் அதற்கெல்லாம் சாவித்ரி புலே புன்னகையை மட்டுமே தந்தார்.
‘கல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன’ என்று கூறி சமுதாயப் பணியை தொடர்ந்தார் சாவித்திரி பாய் புலே.
"கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்" என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார். திருமணங்களின் போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்க வைத்தார். அவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன.
உயிரை காத்து உயிர் துறந்தார்
மகாராஷ்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென்ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்து நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்தார் சாவித்திரி பாய்.
தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து பலரது உயிர் காக்கப் போராடினார், அப்போது அவரருக்கு வயது அறுபத்தி ஆறு. அப்படிப் பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக் கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். தனது வாழ்க்கையை முற்றும் முழுதாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்புக்கும் ஒப்படைத்துக்கொண்ட அவரை 'இந்தியக்கல்வியின் தாய்' என்று அனைவரும் போற்றுகிறார்கள்.
நவீன கவிஞர் சாவித்திரி
சாவித்திரிபாய் ஆசிரியர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட, மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவற்றில் ஒரு கவிதை கீழ்வருமாறு.
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,
சோராமல் உழை- ஞானத்தை,
செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால்
அனைத்தும் அழியும்.
ஞானமில்லாமல்
விலங்காகிப் போவோம் நாம்.
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே.
சாவித்திரி பாய் ஏற்படுத்திய தாக்கம்
ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும் ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும் என்று 1855-ல் சாவித்ரியின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் 'தியானோதயா'வில் எழுதிய 'மங்குகள், மகர்களின் துக்கம்' என்கிற கட்டுரையை எழுதினார். இதுவே சாவித்திரி பாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். ஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலையெழுத்தை மாற்றி பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் தான் பெண் விடுதலை போராளி சாவித்ரி பாய் பூலே.
- அறிவுமதி அன்பரசன்