அதானி குழுமத்திற்கு மிக அதிக அளவில் கடன் உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி சரிந்துள்ளது.
உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு :
அதானி குழுமத்தின் பங்கு சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
வீழ்ச்சியடைந்தது பங்கு மதிப்பு :
இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தற்போது, ரூ.46,000 கோடி சரிந்து வீழ்ச்சியை கண்டுள்ளது.
தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக, 20அயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டவும், உலகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகி சந்தையில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
ஒரே நாளில் சரிந்த பங்கு மதிப்பு :
முந்தைய தினமான ஜனவரி 24ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் வெளியானதை தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 18.23 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் விளக்கம் :
இந்நிலையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை குறித்து பேசிய அதானி குழுமம், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையானது ஆதாரமற்றது என்றும், தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இதுகுறித்து நிறுவனத்தில் சார்பில் அதன் செகரட்டரியும், சட்ட பிரிவின் இணை தலைவருமான ஜாட்டின் ஜலுந்த்வாலா கூறிய போது, “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.
அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 819 சதவீதம் அதிகரித்துள்ளது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3-ம் இடத்தில் உள்ளார். இந்தச் சூழலில் தற்போது வெளிவந்திருக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் வளர்ச்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. எனவே, தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பதாக” தெரிவித்துள்ளார்.