இத்தாலியில் கண்டறியப்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள்!

இத்தாலியில் கண்டறியப்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள்!
Published on
Updated on
2 min read

செவ்வியல் மொழியான தமிழ் மொழி இலக்கிய, பண்பாட்டு வளம் செறிந்தததாகும். தமிழ் இலக்கியங்கள், ஆவணங்கள் பலவும்  ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பல சுவடிகள் இன்று இல்லை. இச்சூழலில் இத்தாலியின் வெனீசு நகரத்திற்கு அருகே உள்ள தீவு ஒன்றில் தமிழ் ஓலைச்சுவடிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

 
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் த.க.தமிழ்பாரதன். தமிழ்-கிரேக்க ஒப்பாய்வு மேற்கொண்டுள்ளார். இவர் கிரேக்கத் தொல்லெழுத்துக் கலை தொடர்பான கருத்தரங்கிற்காக இத்தாலியின் வெனீசு நகரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக வெனீசு சென்றிருந்த அவர், தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளார்.


வெனீசு அருகிலுள்ள சான் லாசரோ எனும் தீவில் இயங்கி வரும் அர்மேனிய நூலகத்தில் அரிய ஆவணங்கள் உள்ள காப்பகத்தில் "லமூலிக் லாங்குவேஜ்" என்று பெயரிடப்பட்ட ஓலைச் சுவடிகள் இருந்துள்ளன. அது தமிழ் மொழியில் எழுதப்பட்டது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழைத்தான் லமூலிக் என்று அவர்கள் எண்ணியுள்ளனர் போலும்.

அதைப் பார்வையிடவும் படிக்கவும் முதலில் அனுமதி தரப்படவில்லை. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு அனுமதி பெற்று, தமிழ் ஓலைச்சுவடிகளை அண்மையில் படித்துள்ளார். அந்நூலகத்தில் ஓலைச்சுவடிகள் இருப்பதைத் தெரியப்படுத்திய பேரா. மார்கிரீடா ட்ரெண்டோ அவர்களுக்கும், தமிழறிஞர் பேரா. அண்ணாமலை அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஓலைச்சுவடிகள் குறித்து தமிழ்பாரதன் கூறியதாவது, ஏறத்தாழ 170 ஓலைச் சுவடிகள். பெரும்பாலும் இருபுறமும் எழுதப்பட்டிருந்தன. திருச்சிராப்பள்ளி-காஞ்சிபுரம் ஊர்ப்பெயர்கள் இடம்பெற்றிருந்தன.  ‘ஞான’ என்ற சொல் பரவலாக எழுதப்பட்டிருந்தது. உரைநடைத் தமிழாக இருப்பதால் பிற்காலத்ததாக இருக்கலாம் எனும் தமிழ்பாரதன், இந்த ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.

மேலும், ஓலைச்சுவடிகளைப் பார்க்கவும் படிக்கவும் உதவியாக இருந்தே அர்மேனிய நூலகத்தின் துறவிக்குத் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக அளித்ததோடு, சிலையில் உள்ள எழுத்தாணி ஓலைச்சுவடியின் வழி எழுதுமுறையை எடுத்துரைத்துள்ளார் அவர்.  கண்டம் கடந்து ஐரோப்பாவிலுள்ள இத்தாலியின் வெனீசு நகரத்தில் கண்டறியப்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com