ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராயலப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில வருடங்களாகவே பொருளாதார சிக்கலில் தவித்து வந்துள்ளார்.
கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, வருமானத்துக்கு வழியின்றி வாடினார். தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சொந்த ஊரை விட்டு துபாய் நாட்டிற்கு சென்று வேலை செய்வதற்கு முடிவெடுத்தார்.
அதன்படி ஏஜெண்ட் ஒருவரிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்ததைத் தொடர்ந்து சிவா துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அங்கு அவருக்கு ஆடு மாடு, வாத்துக்கள் போன்றவற்றை பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது.
பாலைவனத்தின் நடுவே கடுமையான வெயிலில் ஆடுகளை பராமரிக்கும் சிவாவுக்கு பேச்சுத்துணைக்கு கூட ஒருவரும் இல்லாதிருந்ததால் விரக்தியடைந்தார். சுற்றிலும் பல கிலோ மீட்டர் தொலைவு வரை வீடுகளோ, மரங்களோ, செடி கொடிகளோ எதுவும் இல்லை.
கையில் மொபைல் போனை மட்டும் வைத்திருந்த சிவா ஓரிரு நாட்களிலேயே மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சிவா, தனது நிலை குறித்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
மனைவி, பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வேலைக்கு வந்து தற்போது பாலைவனத்தில் அகப்பட்டுக் கொண்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் தன் உயிர் பிரிந்துவிடும், இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் அழுதவாறே பேசினார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் வந்து மாட்டிக் கொண்டதாக கூறியவர், தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆந்திர அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், நடவடிக்கையில் இறங்கினார்.
மத்திய அரசு அனுமதியுடன் கூலித்தொழிலாளி விரைவில் அழைத்து வரப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். குடும்ப பொருளாதாரத்தை சரி செய்வதற்காக துபாய் சென்ற கூலித்தொழிலாளி, ஆடுஜீவிதம் பட பாணியில் ஒற்றை ஆளாய் சிக்கி தவிக்கும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.