
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இராணியான ராமதேவி தொண்டைமான் இன்று இயற்கை எய்தினார்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சமஸ்தானங்கள் என இரு முக்கிய நிர்வாக பிரிவுகளாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின் 565 சமஸ்தானங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவோடு இணைத்தார். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 மார்ச் மாதம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் ராஜகோபாலத் தொண்டைமான். இவரது மனைவியே தற்போது மறைவுற்ற இராணியார் இரமாதேவி தொண்டைமான். இவரே தமிழ் சமூகத்தின் கடைசி இராணியாவர்.
புதுக்கோட்டை சமஸ்தானம் 1686ல் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தனி சமஸ்தானமாக உருவானது. ஆவடை இரகுநாத தொண்டைமான் அப்போது இதன் மன்னராக இருந்தார். தொடர்ந்து தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராக முடிசூட்டிக் கொண்டவர் ராஜகோபாலத் தொண்டைமான். 1922ல் பிறந்த இவர் மன்னராக பொறுப்பேற்கும் பொழுது இவரது வயது ஒன்பதாகும். இவரது ஆட்சி காலத்தில் தான் புதுக்கோட்டைக்கு ரயில் பாதை போடப்பட்டது. இவர் மகாத்மா காந்தியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது நல்லடக்க நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதம் இந்தியாவின் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார். அப்போது புதுக்கோட்டை சமஸ்தான கஜானாவில் இருந்த பணத்தையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார்.
மன்னர் நிர்வாகத்தில் இருந்த மன்னர் கல்லூரியையும் கூட மாகாண அரசிடம் ஒப்படைத்தார். 1972 இல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ்நாடு அரசுக்காக புதுக்கோட்டை அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.
கடைசி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்த இவர் 1997ல் இறந்தார். இவரது மனைவியான மாட்சிமை பொருந்திய இராணியார் ராமதேவி தொண்டைமானும் கடைசிவரை மிக எளிமையாக வாழ்ந்து இன்று இயற்கை எய்தியுள்ளார்.