திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பெரம்பூர் பாஞ்சாலி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 22-ம் தேதியன்று மணிகண்டன் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற சமயத்தில், அவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது.
பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற மர்மநபர்கள், 5 சவரன் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பியோடினர்.
இதனை அறிந்து அதிர்ந்து போன மணிகண்டன் ஊத்துக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார் தோமூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், பூண்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் பிரபாகரன் என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாகரன் மீது வெங்கல் பெரியபாளையம், பென்னாலூர் பேட்டை, கனகம்மா சத்திரம் ஆகிய காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிடும் பிரபாகரன், கூட்டாளிகளுடன் நுழைந்து பணம், நகையை திருடுவது பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ளது. மேலும் திருடிய பணத்தை வைத்து சொந்தமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா கட்டியிருக்கிறார்.
இதையடுத்து தற்போது திருட்டு வழக்கில் கைதான பிரபாகரனை கைது செய்த போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்காக பறந்து பறந்து வேலை பார்த்த பிரபாகரன் தேர்தல் முடிந்த பிறகு வழக்கமான திருட்டுச் செயல்களில் ஈடுபட்ட இந்த சம்பவம் திருவள்ளூர் மக்களை திகைப்படைய வைத்துள்ளது.