கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கருணாபுரம் பகுதியை கண்ணீர்க் கடலில் மூழ்க வைத்த இந்த கோரச் சம்பவம்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

பெயரில் மட்டுமே கருணை கொண்ட ஊராக விளங்கிய கருணாபுரத்திற்கு ஜூன் 19-ம் தேதி கருப்பு நாளாகவே அமைந்தது. எந்த வீட்டில் சென்று துக்கம் விசாரிப்பது எனும் அளவுக்கு கிராமம் முழுவதுமே ஓலக்குரல் விண்ணை அதிரச் செய்கிறது.

சாராய போதையில் தன்னை மறக்க நினைத்தோர் பலர் உயிரை விட்டதைத் தொடர்ந்து அவர்களின் குடும்பமே நிர்க்கதியாய் மாறிப்போனது.

கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பலர் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் விஷச்சாராயம் குடித்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கருணாபுரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சுரேஷ், பிரவீன், சேகர், சுரேஷ், மணிகண்டன், மணி, தனக்கொடி, ஆறுமுகம், இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, ராமு, டேவிட், கந்தன், வடிவு, சுப்பிரமணி, ஆனந்தன், ரவி, மனோஜ்குமார், ஆனந்த், விஜயன் நாகப்பிள்ளை உள்ளிட்ட 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட நிலையில், தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் நேரில் விரைந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு எம்.எஸ். பிரசாந்த் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

மேலும் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி., எஸ்.ஐ. உள்ளிட்ட காவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். இந்த கோரச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன் மற்றும் கோவிந்தராஜின் மனைவி என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சாராயம் சப்ளை செய்த மொத்த வியாபாரி சின்னத்துரை என்பவரை பிடிப்பதற்கு 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் விஷச்சாராயத்தை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளைவுட், பிளாஸ்ட்டிக் போன்றவற்றின் உற்பத்திக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதுதான் மெத்தனால். மை, பிசின்கள், பசைகள், சாயங்களை உருவாக்குவதற்கு கரைப்பானாக பயன்படுத்தும் மெத்தனாலை சாராயத்தில் கலந்து கொடுத்துள்ளனர்.

மனிதர்களின் நியூரான்களில் கலந்து மரணத்தை விளைவிக்கும் இந்த மெத்தனாலை தொழிற்சாலைக்கு தேவைப்படுவதாக கூறி வாங்கிச் செல்கின்றனர் கள்ளச்சாராய வியாபாரிகள். இவ்வாறு மெத்தனால் கலந்த சாராயத்தை குடிப்போருக்கு கண்பார்வை பறிபோவது, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தொடங்கி உயிர்ப்பலி வரை ஏற்படும்.

கடந்த 2023-ம் ஆண்டு காஞ்சிபுரம் மற்றும் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அப்போது பலியானதற்கு சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடமும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இருமடங்கு உயர்ந்து வருகிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழக அரசு சார்பிலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் துக்க வீடாய், கணவனை, தந்தையை, மகனை, சகோதரரை பறிகொடுத்த பெண்கள் வயிற்றிலும் மாரிலும் அடித்துக் கொண்டு கதறியழும் காட்சிகள் தமிழ்நாட்டு மக்களை உருக்குலைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com