
முதல் நாள் கூட்டத்தொடர் புறக்கணிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. அப்போது, எதிர்கட்சி தரப்பில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு, ஓ.பி.எஸ் தனக்கான எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்து நீக்காமலும், இருக்கைகளிலும் மாற்றம் செய்யாமலும் இருந்ததால் முதல் நாள் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இரண்டாம் நாள் கூட்டத்தொடர்:
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு கடிதங்கள் குறித்து சபாநாயகர் விளக்கமளித்தார். அப்போது, விதி 6ன் படி எதிர்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி என்றும், பிற பதவிகள் எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்த வழங்கப்பட்டவை எனவும் தெரிவித்தார். மேலும் அலுவல் குழுவில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வதும், எதிர்க்கட்சி துணை தலைவரை அங்கீகரிப்பது கட்டாயமில்லை எனவும் தெளிவுப்படுத்திய அப்பாவு, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு கடிதங்கள் மீது முடிவு எடுப்பதும் சபாநாயகரின் உரிமை என விளக்கினார்.
அமளியில் ஈடுப்பட்ட ஈபிஎஸ்:
இதனிடையே இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியதும், கேள்வி நேரத்தை குறுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், இருக்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். மேலும், கேள்வி நேரம் முடிந்ததும் அதுபற்றி விவாதிக்கப்படும் என சபாநாயகர் கூறியும், அதனை ஏற்காத பழனிசாமி தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் சட்டச்சபையை விட்டு வெளியேற வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஓபிஎஸ் எப்படி எதிர்கட்சி துணைத் தலைவராவார்:
சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் ஈபிஎஸ் தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் இருக்கை விவகாரத்தில் தங்களது கருத்துக்களை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் ஏற்கவில்லை என ஆதங்கம் தெரிவித்த அவர், தங்கள் வசம் 62 எம்.எல்.ஏக்கள் இருந்தும் ஓ.பி.எஸ் எப்படி எதிர்கட்சி துணை தலைவராக முடியும் என கேள்வி எழுப்பினார்.