
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், எத்தனையோ மாட மாளிகைகள் கட்டி அழகு பார்த்தாலும், தனது கல்லறையை பார்க்க முடியாது. ஆனால், தனக்கு தானே கல்லறை கட்டிக்கொண்டுள்ளார் ஒரு பெண். இது வித்தியாசமான ஆசையால் அல்ல; தனக்கென யாருமில்லை என்ற விரக்தியால்... என்பது தான் சோகத்திலும் சோகம்...
இவர் தான் ரோசி. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகேயுள்ள பல்லுளி பகுதியைச் சேர்ந்த இவருக்கு, உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. 66 வயதான ரோஸி, நீண்ட காலமாக தனிமையில் வசித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்தும், பின் நாட்களில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலமும் காலத்தை ஓட்டியுள்ளார்.
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்து வந்த ரோசியை, ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை பாராட்டி கவுரவித்து உள்ளார்.
இதனைத்தொடர்ந்து வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்ற ரோசியிடம் உடன் பணிபுரிபவர்கள் சிலர், நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கிறார்கள்? எனக் கேட்டு கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ரோசி, ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தில், தனக்கென்று ஒரு அழகான கல்லறையை கட்டியுள்ளார்
பின்புறத்தில் ஒரு வாயில் அமைக்கப்பட்டு, அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் அந்த கல்லறை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக ரோசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கவனிக்க யாரும் இல்லாததால், அவர் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து, நீண்ட நாட்களாக ரோசியை காணாததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவரது வீட்டினுள் சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரோசியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரோசியின் ஆசைப்படியே, அவரது உடலை அவர் கட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர்.
தனிமையைப் போல சிறந்த ஆசானும் இல்லை, தனிமையைப் போன்ற பெரும் கொடுமையும் இல்லை என்பார்கள். ஆனால், தனிமையை கேலி, கிண்டல் செய்தால், தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்ணின் மன உளைச்சலை உணர்ந்து, இனிமேலாவது சக மனிதரிடத்தில் அன்பு செலுத்துவோம்.