"தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்ல" டாஸ்மாக்கை சூறையாடிய தாய்மார்கள்...!!

"தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்ல" டாஸ்மாக்கை சூறையாடிய தாய்மார்கள்...!!

நேற்று அன்னையர் தினம் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நட்சத்திரங்கள் பலரும் தனது தாயுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இளையராஜா முதல் அனிருத் வரை பலரும் இசையமைத்த தாய்ப்பாச பாடல்களை வாட்சப் ஸ்டேட்டஸில் ரயில் விட்டு குவித்தவர்களும் ஏராளம். 

நிலைமை இப்படி இருக்க ஊரப்பாக்கத்தில் சில அன்னையர்கள் வித்தியாசமாக அன்னையர் தினத்தை கொண்டாடி இருக்கின்றனர். பீர் பாட்டில்களை தூக்கியடித்தும் நாற்காலிகளை வீசி எறிந்தும் அவர்கள் இந்த ஆண்டு அன்னையர் தினத்தை கொண்டாடி இருக்கின்றனர். நீங்கள் நினைப்பது போல அவர்கள் போதையில் கொண்டாடவில்லை. போதைக்கு எதிராக இதனை கொண்டாடி இருக்கிறார்கள். "தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்ல" என கேஜிஎப் திரைப்படத்தில் கூறும் வசனத்தை நிரூபித்து காட்டியுள்ளனர் அந்த தாய்மார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காரணை புதுச்சேரியின் பிரதான சாலையில் அரசு மதுபான கடையுடன் கூடிய பார் இயங்கி வருகிறது. இந்த வழியாக பெரியார் நகர், காட்டூர், கோகுலம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோரும் ஆயிரகணக்கான மக்கள் சென்னைக்கும், செங்கல்பட்டிற்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுக்கடையில் இருந்து குடித்து விட்டு வரும் மதுப்பிரியர்கள் நடந்து செல்லும் பெண்களிடம் தவறாக செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் செயின் பறிப்பு, வழிபறி, கொலை உள்ளிட்ட குற்றசம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மது கடையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இருந்தும் மதுக்கடையை அரசு மூடுவதாக தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து எரிச்சலடைந்த தாய்மார்கள் வெகுண்டெழுந்தனர். நேற்று மதுக்கடையின் முன்பு ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள், மது கடையினுள் புகுந்து அங்குள்ள பாட்டில்களை எடுத்து கடையின் மீது வீச தொடங்கினர். இதை சற்றும் எதிர்பாராத கடையின் விற்பனையாளர் கடையை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் அப்போதும் அங்கிருந்த பாரினுள்ளே சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த தாய்மார்கள் "இவ்வளவு ரணகளததிலும் கிளுகிளுப்பா" எனக் கூறி பாரினுள் புகுந்து நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனை கண்ட மதுப்பிரியர்கள் என்றழைக்கப்படும் குடிகாரர்கள், அங்கிருந்து விட்டால் போதும் என தப்பியோடியுள்ளனர்.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாய்மார்கள் அனைவரும் முககவசம் அணிந்தும்  முந்தானையால் முகத்தை மறைத்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com