மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்...திருமாவளவன் எச்சரிக்கை!

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்...திருமாவளவன் எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பங்குபெற்று உரை நிகழ்த்தினர்.

காவி பாசிச எதிர்ப்பு மாநாடு

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனிஸ்ட் ) சார்பில் காவி பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்லுகிற, அந்த பொதுமொழி, இந்தியாவில் அது இந்துத்துவாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா என்பது இந்து மக்களின் ஒட்டுமொத்த இந்துக்களின் கோட்பாடு அல்ல. அது ஆர்எஸ்எஸ் கோட்பாடு. இந்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொண்டிருக்கிற ஒரு கருத்தியல் அல்ல. அவர்கள் ஒருமுறைக்கு, இரண்டு முறை ஆட்சிபீடத்தில் அமர்ந்து விட்டார்கள். மூன்றாவது முறையும் அமர்ந்தால் என்ன ஆகும்? இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிற மாநாடாகத் தான் இந்த காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டை நான் பார்க்கிறேன்.

இடதுசாரிகளின் ஒற்றுமை

இந்தியா முழுவதும் இருக்கிற இடதுசாரிகள் ஒருங்கிணைய வேண்டும். அதை உணர்த்துகிற மாநாடுதான் இந்த மாநாடு. அனைத்து இடதுசாரிகள் இன்றைக்கு, அகில இந்திய அளவிலே, ஜனநாயக சக்திகளோடு ஒருங்கிணைய முன்வந்திருக்கின்றனர். இதை அடையாளம் காண வேண்டியதும், இவர்களோடு கைகோர்க்க வேண்டியதும், விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பு, விடுதலைச் சிறுத்தைகளின் கடமை.

இன்றைக்கு நாம் வலுவாக முன்னெடுத்திருக்கிறோம். யார் இணைகிறார்களோ, இல்லையோ, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நிற்கும். 2024 ம் ஆண்டு, பொதுத் தேர்தலில், அகில இந்திய அளவிலே, இதற்கான முன் முயற்சிகளை இடதுசாரிகள் போன்ற இயக்கங்கள் முன்னெடுக்குமேயானால் விடுதலைச் சிறுத்தைகள் அதற்குத் தயாராக இருக்கிறது.

அரசியலமைப்பிற்கு ஆபத்து

2024 ம் ஆண்டில், மோடி, மீண்டும், ஆட்சிக்கு வரக் கூடாது. மோடி ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்கிறதோ, இல்லையோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, சிதைத்து, இல்லாமல் செய்துவிடுவார்கள். பெரியாரை எதிரின்னு அவர்களால் சொல்ல முடியும். அது, தமிழ்நாட்டுக்குள் தான் அவர்களுக்கு அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும்.

அம்பேத்கரை நேரடியாக, அவர்கள் பகை என்று சொன்னால், இந்திய அளவில், 35 கோடி மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரும். பெரிய பாதிப்பை சந்திக்க நேரும். ஆகவே, அம்பேத்கரை வெளிப்படையாக எதிரி என்று சங்பரிவார்களால் சொல்ல முடியாது. எனவே இதை புரிந்து கொண்டு நாம் காவிப் பாசித்தை முறியடிக்க அணிதிரள வேண்டும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com