திருச்சி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

ஒரு நாள் கலெக்டராக வாய்ப்பு...
திருச்சி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

படித்து முடித்து என்னவாக போகிறீர்கள் என பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் கேட்பதுண்டு. அதற்கு படித்து கலெக்டராக வேண்டும் என பலரும் பெருமை பொங்க கூறியிருப்பர். ஆனால் படித்து முடிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட அல்ல, குறிப்பிட்ட டாஸ்க்-கை செய்து முடித்தால் மாவட்டத்தின் கலெக்டராக ஒரு நாள் முழுவதும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது வேறு எங்குமல்ல, திருச்சி மாவட்டத்தில்தான்...

திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில்பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உதவி ஆட்சியர் அமித் குப்தா, கோட்டாட்சியர் அருள், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவை கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மோனோ ஆக்டிங் நாடகம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பேசிய கலெக்டர் பிரதீப்குமார் தமிழகத்தில் கஞ்சா, மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்ததாக கூறியவர், மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் போதைப்பொருள் புழக்கம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்கள் தெரியப்படுத்தலாம் என்றும் அவ்வாறு தகவல் தெரிவிக்கும் மாணவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

போதைப்பொருள் புழக்கம் குறித்து அதிக தகவல்களை அளிப்பவர்கள் திருச்சி மாவட்டத்தின் கலெக்டராக ஒரு நாள் முழுவதும் பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள் என்ற பிரதீப்குமாரின் அட்டகாசமான அறிவிப்பு மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

டாஸ்மாக்குகள் விதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக இயங்கினால், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை போன்றவற்றை மாணவர்கள் தைரியமாக தெரியப்படுத்தலாம் என கூறினார்.

அவ்வாறு ஒரு நாள் கலெக்டராக அமரும் அந்த மாணவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என பிரதீப்குமார் பேசினார். இது ஒரு மாணவரோடு மட்டும் முடிவடையாமல், அடுத்தடுத்து ஒரு நாள் முதல்வர் பதவி காத்திருக்கிறது எனக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கலெக்டர் பிரதீப்குமாரின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com