

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, கடந்த 21-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. படம் வெளியான நாளில் இருந்து ரசிகர்களின் கொண்டாடட்டம் நிற்கவில்லை. மெட்ராஸ்க்கு பிறகு ஒரிஜினல் ரஞ்சித்தையும், நான் கடவுள், மதராசப்பட்டினம் படத்திற்கு பிறகு நடிப்பில் கலக்கிய ஆர்யா என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், அதில் நடக்கும் அரசியலையும் அவரது படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர். இவரது மெட்ராஸ் திரைப்படம் இவரது பெயரை ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் சினிமாவிலும் தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு வெளியான கபாலி, காலா போன்ற படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு முதன்மையாக பேசப்பட்டதால், பா.ரஞ்சித்தின் முகம் சற்று மறைந்தது.
மெட்ராஸ் படத்திற்கு பிறகு மீண்டும் தன் பெயரை நிலை நாட்டும் படியான படத்தை தந்துள்ளார் சார்பட்டா பரம்பரை மூலம். 1970-களில் நடைபெற்ற ரோசமான குத்துச்சண்டை என்பதை மையமாக வைத்தும், அதன் பின்னால் இருந்த அரசியலையும் எடுத்துக் கூறியது சார்பட்டா பரம்பரை. திமுக-அதிமுக-காங்கிரஸ் கட்சிகளின் கொடிகளையும், தலைவர்களின் பெயர்களையும், எமெர்ஜென்சி காலகட்டத்தில் இக்கட்சிகளின் நிலைப்பாட்டையும் இருந்தது இருந்தப்படி வெளிக்காட்டியிருந்தார் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர் என்பது நாம் அறிந்ததே. அவரது படங்கள் வாயிலாக திமுக, மற்றும் பெரியாரை நிச்சயம் காட்டத் தவர மாட்டார். அதேபோல இப்படத்திலும் கலைஞர், ஸ்டாலின் என அனைவரையும் தொட்டுள்ளார் பா.ரஞ்சித். பொதுவாக இவரது படங்களுக்கு ஆர்.எஸ்.எஸ், இந்துதுவா போன்ற அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவர். ஆனால் சார்பட்டா பரம்பரை படத்திற்கு, அதிமுகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
படத்தில் எமெர்ஜென்சி காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவின் துணையோடு கள்ளச்சாரயம் காய்ச்சுவது போன்ற காட்சி அமைப்புகள் அதிமுகவினரை கோபமடையச் செய்துள்ளது. ஆனால் திமுகவினரோ அக்கட்சிக்கு சாதகமான காட்சிகள் படத்தில் இருப்பதால், இதனை கொண்டாடி வருகிறது. இதன் மூலம் அதிமுக-திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் மாறி மாறி திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி சார், சார், டான்ஸிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இருக்காதா பின்னே திமுக கட்சியின் ரத்தமாயிற்றே..