
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். இவருக்கு தேர்தலில் சீட் கொடுத்தபோதே ஸ்டாலினின் மகன் என்பதால் சீட் கொடுக்கிறார்கள் என்றும், வாரிசு அரசியல் செய்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் திமுக வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உதயநிதிக்கு ஏற்பட்டது. மேலும் முதல்வரின் மகன் என்பதாலும், திரை நட்சத்திரம் என்பதாலும் இயல்பாகவே ஊடக கவனம் அவர் மீது திரும்பியது.
ஆகவே பிற எம்.எல்.ஏக்களை விட அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி. தமிழக வரலாற்றில் சில எம்.எல்.ஏக்களே இப்படி தொகுதி முழுக்க அலைந்திருப்பார்கள். பலர் வெற்றிபெற்றதும் தொகுதி பக்கமே வராமல் தான் இருப்பார்கள்.
இந்நிலையில் தான் தொகுதியில் உதயநிதியின் தினசரி விசிட் அந்த பகுதி மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறது. கழிவுநீர், கழிப்பறை போன்ற சுகாதார பிரச்சனைகளில் வெறுமனே அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல் அந்த பகுதிக்கே சென்று நடவடிக்கை எடுக்கிறார் உதயநிதி. மேலும் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அடிக்கடி சென்று நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவரின் இந்த உழைப்பு காரணமாக வெகு விரைவில் அமைச்சராகி விடுவார் என்கிறார்கள் தொகுதி மக்கள்.