பச்சைப் பசேலென காட்சியளிக்கும் கிராமங்களில் குடிநீர் என்பது தேவாமிர்தமாகத்தான் இருக்கும் என பலரும் நினைத்திருப்பதுண்டு. ஆனால் இந்த கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் நிலைதான் இது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சிக்கு உள்பட்ட சம்பானோடை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குடிநீர்த் தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குடிநீர்த் தொட்டியின் சுவர்ப் பகுதி பெயர்ந்தும், தூண்கள் சேதமடைந்தும் என எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அதோடு பழுதடைந்த இந்த குடிநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் கலந்த நீர் வரத் தொடங்கி அதனை மக்கள் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.
சேறும், சகதியும் கலந்த இந்த தண்ணீரை குழாய் மூலம் பிடித்துச் செல்லும் பெண்கள், அதனை மூன்று முறைக்கு மேல் கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
நாளாக நாளாக குடிநீரின் வண்ணம் காவி நிறமாகி வருவதால் குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். இந்த தண்ணீரை குடிப்பதால் வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
பழுதடைந்த தொட்டியை இடித்து தள்ளி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்றும், தெளிந்த நீர் வருவதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலோடு இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் சம்பனோடை கிராமத்தினர்.
மாவட்ட நிர்வாகம் கருணை கொள்ளுமா? கிராமத்தினரின் கோரிக்கை தீர்த்து வைக்கப்படுமா?