பூட்டானில் குறைந்த விலையில் தங்கம்; உண்மை நிலவரம் என்ன?

பூட்டானில் குறைந்த விலையில் தங்கம்; உண்மை நிலவரம் என்ன?

இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது அந்தஸ்தின் அடையாளம் கூடவே சேமிப்பும். அதனால் தான் அனைத்துத் தட்டு மக்களும் தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கத்தை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அதன் விலையோ, பெரும்பாலானவர்களை எட்டாக்கனியாகவே வைத்திருக்கிறது. 

இந்திய மக்கள் தூரம் இருந்தே பார்த்து பெருமூச்சு விட்ட தங்கம் துபாய் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் மிக மிகக் குறைவான விலையில் விற்கப்படுகிறதாம். இதற்கு முன்பெல்லாம் தங்கம் வாங்குவதென்றால் அனைவரின் குறியும் துபாயை சேரும். ஆனால் சமீப காலமாக துபாயை விட்டு விட்டு பூடான் பக்கம் திரும்பியுள்ளனர் பெரு வணிகர்கள். 

இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60 ஆயிரத்து 500 ரூபாய் என்றால், பூட்டானில் இதே தங்கத்தின் விலை வெறும் 43 ஆயிரத்து 700. அதாவது 10 கிராமுக்கு 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. அதிலும் பூட்டானில் தங்கம் வாங்குவதற்கு தனியாக வரி கட்டணமோ, வளர்ச்சிக் கட்டணமோ, ஜி.எஸ்.டி.யோ எந்த வரியும் கட்டத் தேவையில்லை. 

வெறும் 10 கிராம், 20 கிராம் தங்கம் வாங்குவதற்காக யார் இங்கிருந்து பூட்டான் வரை செல்வார்கள் என கேள்வி இப்போதே பலருக்கும் எழலாம். பூட்டான் நாடு என்பது தங்கம் வாங்குவதற்கான சிறந்த நகரம் மட்டுமல்லாமல் சுற்றுலா நகரமாகவும் விளங்குகிறது. 

சரி இதுதான் சமயம் என விரும்புவோர் தங்கத்தை வாங்கி மூட்டை கட்டி வரலாம் என கிளம்பினால் அதற்கு 3 கட்டளைகளை விதித்திருக்கிறது பூட்டான்  அரசு. வரியில்லா கட்டணத்தை வாங்குவதற்கு இந்தியர்கள் முதலில் 1200 ரூபாய் முதல் 1800 வரை செலுத்த வேண்டும், இரண்டாவது, பூட்டான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் குறைந்தது ஒரு இரவு தங்க வேண்டும். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் அமெரிக்க டாலரிலேயே நகைகள் வாங்க வேண்டும் என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதென்றால் சுற்றுலா விடுதியில் ஒரு நாள் வாடகையாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியதுள்ளது. தங்கத்தின் விலை குறைவாக இருந்தாலும் அதில் கிடைத்த லாபத் தொகையை நிபந்தனைகளுக்கே செலவழிக்கும் நிலையும் இருப்பதால் சாமானிய மக்களுக்கு சாத்தியமா என்பது சந்தேகமே.. ஆனால் கிலோ கணக்கில் நகை வாங்க காத்திருக்கும் செல்வந்தர்களுக்கு நிச்சயம் பூட்டான் பயணம் ஏற்றத்தையே வழிவகுக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com