சென்னையின் முக்கிய சாலைகளில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விளம்பர பதாகை ஒன்று வாகன ஓட்டிகளின் கண்களில் சிக்கி கேள்விகளை எழுப்பியுள்ளது.
மஞ்சள் வண்ணத்திலான அந்த பதாகையில் ஜீரோ இஸ் குட் என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருக்கிறது. பொதுவாக சாலையில் 40 கி.மீ. வேகத்துக்குள் பயணிப்பதே நல்லது, தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வார்த்தைகளே இடம் பெற்றிருக்கும்.
ஆனால் பூஜ்யம்தான் நல்லது என குறிப்பிடப்பட்ட இந்த பதாகை பலரையும் குழப்பமடைய வைத்தது. யூ-டர்ன் செய்வதற்கான வழிமுறையாக இருக்கலாம், அல்லது வேகத்தை குறைப்பதற்கான முறையாக இருக்கலாம், அல்லது அபராதம் வசூலிக்காமல் இருப்பதற்கான முறை என்றும் இணையதளங்களில் விவாதங்கள் கிளம்பியது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் சிலர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதாவது ஜீரோ இஸ் குட் என்ற வார்த்தைக்கு விபத்துக்கள் இல்லாததுதான் நாட்டுக்கு நல்லது என்பதன் சுருக்கம்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவதாலும், தலைக்கவசம் அணியாததால் பலரும் விபத்தில் சிக்குவதும் என இதுபோன்ற சம்பவம் தொடர்கிறது.
விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு சென்னை போக்குவரத்து காவல்துறை இவ்வாறான விழிப்புணர்வை செயல்படுத்தியுள்ளதாக கூறுகிறார் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் சுதாகர்.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் இவ்வாறான விளம்பரங்களை உள்ளூர அறிந்து போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் விபத்தில்லா சென்னை என்பது சாத்தியம் என்கிறார் ஐஐடி பேராசிரியர் வெங்டேஷ்.
கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது சென்னையில் வாகனம் ஓட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. காரணம், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தங்கள் அவசரத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறார்களே தவிர, போக்குவரத்து விதிகளை மதிப்பதே இல்லை.
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநராக இருந்து இதுவரை விபத்து இல்லாமல் ஓட்டி சிறந்த ஓட்டுநர் என்ற விருதைப் பெற்ற ராமலிங்கம் என்பவர் இதுகுறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார்.
விபத்தில்லாத சென்னை, அபராதம் இல்லாத சென்னை, சாலை விதிகளை மீறுபவர்கள் இல்லை என்பதை பதிவு செய்யும் விதமாக என பலப்பல காரணங்களை வைத்து இந்த ஜீரோ இஸ் குட் என்ற பதாகை வைக்கப்பட்டிருந்தாலும், இதனை செயல்படுத்துவது பொதுமக்களாகிய நம் கையில்தான் உள்ளது.