அம்பேத்கர் ஆதரித்த பொது சிவில் சட்டம் எப்படிபட்டது? திருமாவளவன் விளக்கம்!

அம்பேத்கர் ஆதரித்த பொது சிவில் சட்டம் எப்படிபட்டது? திருமாவளவன் விளக்கம்!

அம்பேத்கர் ஆதரித்த பாெதுசிவில் சடடம் எப்படி பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

நேற்று மாலை வேலூர் கோட்டை பூங்கா அருகே திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திராவிட நட்புக் கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அம்பேத்கர் கொண்டு வர நினைத்த பொது சிவில் சட்டம் எப்படி பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையில், அம்பேத்கரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொன்னார் என பாஜகவினர் கூறி வரும் கருத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "புரட்சியாளர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறியது, பாஜகவினர் சொல்கின்ற அர்த்தத்தில் அல்ல. முஸ்லீம்களுக்கு தனிச்சட்டம் கூடாது, கிருத்துவர்களுக்கு தனிச்சட்டம் கூடாது என்கிற பொருளில் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரவில்லை. அவர் சட்ட அமைச்சராக இருந்த போது கோட் ஆப் இந்து பில் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அந்த கோட் ஆப் இந்து பில் என்பதே ஒரு பொது சிவில் சட்டம்தான். அச்சட்டம் சொல்ல வருவது என்னவென்றால், இந்து மதத்திலே பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாக அவர்களுக்கு அடுத்து சத்ரரியர்கள், அவர்களுக்கு அடுத்து வைசியர்கள், அவர்களுக்கு அடுத்த சூத்திரர்கள் இந்த நான்கு வர்ணத்திற்கும் அப்பாற்பட்டு அவர்ணர்களாக இருக்கின்ற தலித்துகள் என்பதாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சமமாக இல்லை. 

அதை விட முக்கியமாக ஆண்களும் பெண்களும் இந்து சமூகத்தில் சமமாக இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை என்று பார்க்கிறபோது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் ஜூரோவாக உள்ளனர். பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. வாரிசுரிமையோ, விவாகரத்து உரிமையோ பெற்றுவிட முடியாது. தத்தெடுப்பதைக் கூட அவ்வளவு எளிதாக எடுக்க முடியாது. அதற்கு காரணமாக அப்போது இருந்தது இந்து பெர்சனல் சட்டம்.  இந்துக்களுக்கான இந்த  தனிச் சட்டம்தான் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது. இந்து சமூகத்தில் நிலவுகிற இந்த பாகுபாடுகளுக்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்கிற அடிப்படையில் அவர் கொண்டு வந்த சட்டம்தான் இந்து கோட் ஆப் பில். அங்குதான் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்தார். பார்ப்பனர்களாக இருந்தாலும் சத்ரியர்களாக இருந்தாலும் திருமண முறை, விவாகரத்து முறை, தத்தெடுக்கும் முறை ஒன்றாக இருக்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமை, சமமான அதிகாரம் ஆகியவை இருக்கவேண்டும். சாதிகளுக்கு இடையில் சமத்துவம், பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் புரட்சியாளர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தின் கருத்தியலை ஒத்துக்கொண்டார், ஆதரித்தார். ஆனால் பாஜகவினர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார் என்று கூறுவதன் மூலம், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக அம்பேத்கர் சிந்தித்தார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதுதான் திரிபுவாதம் திரித்து பேசுவதுதான் அவர்களது அரசியல்" என விளக்கமளித்துள்ளார்.

மேலும் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று வல்லுனர்கள் சொல்வதாக குறிபிட்ட அவர்,  சங்பரிவாரத்தினர் அதனை ஆரிய நாகரிகம் என்று சொல்வாகவும்,  அங்கே ஓடிய நதி சிந்து நதி என்று வல்லுநர்கள் சொல்லும்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சரஸ்வதி நதி அங்கு ஓடியதாக நாடாளுமன்றத்தில் படிப்பதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இவ்வாறாக வரலாற்றை திரிப்பதாக குற்றம் சாட்டிய அவர், வரலாற்றை திரிப்பது இந்துத்துவ அரசியல் என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com