”ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில்...” பாஜகாவை விளாசிய ராகுல்காந்தி!

”ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில்...” பாஜகாவை விளாசிய ராகுல்காந்தி!
Published on
Updated on
1 min read

மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்டது பாரத மாதா என்றும், பாஜகவினர் தேச பக்தர்கள் அல்ல தேச விரோதிகள் என்றும் மக்களவையில் மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடினார். 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் நாளான இன்று, பிற்பகல் 12 மணியளவில் வயநாடு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது உரையின் தொடக்கத்திலேயே பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தாம் மணிப்பூர் கலவரம் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும், அதானி பற்றி பேசப்போவதில்லை என்றும், அதனால் பாஜகவினர் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் பேசினார். 

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தான் நடைபயணம் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தமது நடைபயணத்தின்போது ஏழை, கூலி, விவசாய மக்களின் ஒருமித்த குரலின் வழியே உண்மையான இந்தியாவைக் கண்டதாகக் கூறினார். மேலும், தமது நடைபயணம் இன்னும் நிறையவடையவில்லை என்றும் தெரிவித்தார். 

பின்னர் பேசிய அவர், நாட்டு மக்களுக்காக தான் உயிரை விடவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மணிப்பூரில் தாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைக் குறிப்பிட்ட அவர், அங்கு முகாமில் தங்கி இருந்த பெண்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய அவலங்களை கேட்டறிந்ததாகக் கூறினார். ஆனால், இப்போதுவரை பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவில் இருந்து மணிப்பூர் தள்ளி இருப்பதாக மத்திய அரசு நினைத்துக் கொண்டிருப்பதாக பேசிய அவர், மணிப்பூரில் கொல்லப்பட்டது இந்தியாதான் என்றும், அங்கே நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தப்பட்டது பாரத மாதாதான் என்றும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, ராகுல்காந்தி அவசியமற்ற சொற்களைப் பேசுவதாகக் கூறி மத்திய அமைச்சர் கிரன் ரிஜூஜூ உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசு நினைத்திருந்தால் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் அடக்கி இருக்க முடியும் என்று பேசிய அவர், பாஜகவினரை தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள் என்றும் காட்டமாக சாடினார். மேலும், தனது ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றுவீட்டீர்கள் என்று உருக்கமாக பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்ததுபோல் தற்போது மணிப்பூரும் அரியானாவும் பாஜகவின் அகங்காரத்தால் பற்றி எரிகிறது என்று பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com