2022ஆம் ஆண்டிற்கான ”தகைசால் தமிழர் விருது” யாருக்கு?

2022ஆம் ஆண்டிற்கான ”தகைசால் தமிழர் விருது” யாருக்கு?
Published on
Updated on
1 min read

தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தகைசால் தமிழர் விருது:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த விருதினை வழங்கி கெளரவிப்பது தான் தகைசால் தமிழர் விருது. இந்த விருதை பெறும் விருதாளருக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எந்த வருடத்திலிருந்து வழங்கப்படுகிறது:

தகைசால் தமிழர் விருது என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு முதல்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தியது.  அதன்படி தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் செயல்படும் நபரை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதற்கான தேர்வு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். 

கடந்த ஆண்டிற்கான விருது:

முதன் முறையாக கடந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதினை அறிவித்த மு.க.ஸ்டாலின், அந்த ஆண்டிற்கான தேர்வாளாரையும் அறிவித்தார். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்ட தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை எட்டிய தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை, கடந்த ஆண்டு தேர்வு செய்து தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

விருதாளர் தேர்வுக்கான ஆலோசனை:

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருதாளர் தேர்வு கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  

இந்த ஆண்டிற்கான விருது யாருக்கு:

இந்த விருதாளர் தேர்வு ஆலோசனை கூட்டத்தில்,  விடுதலை போராட்ட வீரராக தனது இளம் வயதை சிறைச்சாலையில் கழித்து, ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாக பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு, 2022ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வான விருதாளருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது, நல்லகண்ணுவிற்கு தமிழக முதலமைச்சர் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கவுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com