மணிப்பூரில் கொடூரத்தின் உச்சக்கட்டம்... பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்ட கும்பல்!! நடந்தது என்ன?

மணிப்பூரில் கொடூரத்தின் உச்சக்கட்டம்... பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்ட கும்பல்!! நடந்தது என்ன?
Published on
Updated on
2 min read

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரமும் பதற்றமுமாக இருந்து வரும் நிலையில், தற்போது நாட்டையே உலுக்கும் அளவில் அரங்கேறிய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக குகி சமூகத்தினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும் இடையே பழங்குடியினர் அந்தஸ்து காரணமாக மோதல் ஏற்பட்டு, மிகப்பெரிய கலவரமாக வெடித்துள்ளது. இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரண்டு மாதங்களாகியும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படாமல் உள்ளது.

இந்நிலையில், நாட்டையே புரட்டிப்போடும் அளவிற்கு நடந்துள்ள ஒரு சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, (19/07/2023) இணையத்தில் இரு வீடியோ வெளியாகி நாட்டு மக்களினிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மணிப்பூர் கலவரத்தின் தொடக்கத்தில், மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆண் கும்பல், குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை , நிர்வாணமாக்கி கூட்டத்தின் நடுவே நடக்க வைத்து அழைத்துச் சென்றதோடு, பாலியல் வன்கொடுமைகளையும் செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக அரசியல் வட்டாரங்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் மேகசந்திர சிங் ," குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார். 

மேலும், இது குறித்து விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளனர். அதாவது, இந்த சம்பவம் மே மாதம் 4ம் தேதி, மெய்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தியுள்ள தௌபால் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதற்கு முந்தைய நாள் 3ம் தேதி, துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 800 முதல் 1000 பேர் வரைக் கொண்ட கும்பல், குகி சமூகத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்து தாக்கியபோது, 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் தப்பித்து உயிர் பிழைப்பதற்காக, காட்டினுள் ஓடியுள்ளார். இதில், 20 வயதில் ஒரு பெண்ணும், 40 வயதில் ஒருவரும் மற்றும் 50 வயதில் ஒருவரும் மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பலிடம் சிக்கியுள்ளனர். மூவரையும் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி, மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆண்களின் கூட்டத்திற்கு நடுவில், நடக்க வைத்ததோடு, இளம்பெண்ணை அனைவரின் முன்னிலையில், பட்டப்பகலில் கூட்டுப் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் உதவ முயன்ற போது, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், அவரின் தந்தையும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் காங்போஃபி மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், குற்றவாளிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும், இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், தற்போது நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் உட்பட பல தரப்புகளில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளானது கொடூரத்தின் உச்சம். மனிதாபிமானமற்ற அரக்கர்களை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது" என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " பிரதமரின் மௌனம் மற்றும் செயலாற்ற தன்மை தான் மணிப்பூரின் இத்தகைய நிலைக்கு காரணம். மணிப்பூரில் இந்தியா என்கிற எண்ணம் சீர்குலைக்கப்படும் பொழுது, இந்தியா அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பபூர் மக்களோடு இருக்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்வதற்கான வழி" என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com