புக்கர் புகழ் ராய்
சுசானா அருந்ததி ராய் - இந்தியாவின் நட்சத்திர பெண் எழுத்தாளர். இந்திய அரசமைப்பால் ஒடுக்கப்படும் தலித்துகள், காஷ்மீரிகள் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஆதரவாகத் தன் எழுத்தின் மூலமாகவும், களத்திலும் நின்று குரல் கொடுப்பவர். நலிவுற்ற மக்களுக்காக அவர் எழுதும் கட்டுரைகளும், புதினங்களும் உலகின் கவனத்தை ஈர்த்தவை. அவரது நாவலான "The God Of Small Things" உலகின் முதன்மை பரிசான
'புக்கர்' பரிசு பெற்றது. புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்பதால் உலகப் புகழ் அடைந்தார் அருந்ததி.
கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்கும் 24 நவம்பர் 1961 ஆம் ஆண்டு மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் பிறந்தவர் தான் சுசானா அருந்ததி ராய். இவருக்கு இரண்டு வயதான போது பெற்றோர்கள் இருவரும் பிரிந்த நிலையில் தனது அம்மாவுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார், பின்பு ஐந்து வயதில் தன் தாயுடன் கேரளாவிற்கு செல்கிறார். பத்து வயது வரை பள்ளிக்கு செல்லாத அருந்ததி ராய், கேரளாவில் தனது தாய் தொடங்கிய பள்ளியில் முதல் மாணவியாக சேர்ந்தார்.
அம்மா மேரி ரோசின் அறிவுரை ...
இன்றும் நடுத்தர குடும்பத்தில் வாழும் இளம் வயது பெண்களால் நினைத்ததை செய்ய இயலாத சூழல் தான் நிலவுகிறது. ஆனால் 80-களில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றார் அருந்ததி. கோட்டையத்திலும் (கேரளா) நீலகிரியிலும் (தமிழ்நாடு) தனது பள்ளிப்படிப்பை முடித்த அருந்ததி ராய், டெல்லிக்கு சென்று கட்டடக்கலை பிரிவில் உயர் படிப்பை முடித்து, நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் அர்பன் அஃபயர்சில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும் தன் நண்பருமான, பிரதீப் கிருஷெனை திருமணம் செய்து கொண்ட பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அருந்ததி ராயும், பிரதீப்பும் பிரிந்து வாழ்ந்தனர்.
ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்குரிய எந்த கட்டுப்பாடுகளும் எனக்கு இருந்ததில்லை என்று அருந்ததிராய் கூறுவார். அதே போல் உனக்கு தந்தை இல்லை, சாதி இல்லை, மதம் இல்லை, சடங்கு, சம்பிரதாயம் ஏதுமில்லை. நீ எதை செய்தாலும் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே என்று எந்த தாயாவது தன் மகளை பார்த்து சொல்லியிருப்பார் என்றால் இந்தியாவிலேயே அந்த மகள் நானாகத்தான் இருப்பேன் என்றார் ராய்.
போர்க்குணம் கொண்டவர்!!!
எங்கெல்லாம் ஆதிக்கத்தின் கை ஓங்குகிறதோ, அங்கெல்லாம் அதற்கெதிரான குரலாய் இருப்பவர் தான் அருந்ததி ராய். இவரது படைப்புகளும் பெண் அடிமை, குழந்தை தொழிலாளி, இன வெறி, நிற வெறியென அனைத்து ஆதிக்கங்களுக்கும் எதிரானவையாகத் தான் இருக்கும். அவரது போர் குணத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளது.
அமெரிக்காவில் கர்ஜித்த அருந்ததி !
ஈராக்கிலும், ஆப்கனிலும், அமெரிக்கா போர் தொடுத்த நேரத்தில், அமெரிக்காவிற்கே சென்று அவர்களுக்கு எதிராக அருந்ததி பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2006 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது அவரை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார் .
மன்னிப்பு கேட்க மறுத்த ராய் :
குஜராத்தில் நர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினருக்கு ஆதரவாகக் களத்தில் நின்றார். அப்போது அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை 'நாகரீக வன்முறை' என்று விமர்சித்த அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது.
ஆனால் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ அருந்ததி ராய் மறுத்த நிலையில் அடையாளமாக ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தோழர்களுடன் ஒரு பயணம்...!
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சத்திஸ்கரில் தீவிர தேடுதல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், மாவோயிஸ்டுகள் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று, அவர்களுடன் தங்கி அங்கு நடந்த நிகழ்வுகளையும், அவருக்குக் கிடைத்த அனுபவங்களையும் எழுத்துகளால் தொகுத்து "Walking With The Comrades" (தோழர்களுடன் ஒரு பயணம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பெரும் பேசு பொருளான Walking With The Comrades புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக சேர்க்கப்பட்டு பின்னாளில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சியும், தேசிய விருதும்...
மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எதிராகவும், அதைக் குற்றமாகவும் கருதி வன்முறையை தூண்டிய மதவெறி அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1989ல் In Which Annie Gives It Those Ones படத்துக்காக தனக்கு கிடைத்த தேசிய விருதை திருப்பி அளித்தார் அருந்ததி ராய்.
அருந்ததி ராய் பெற்ற விருதுகள்:
1989 In Which Annie Gives It Those Ones என்ற திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார்.
மாட்டைப் போல் மனிதரைக் கொள்வதை எதிர்த்து தான் வாங்கிய தேசிய விருதினை 2015 ஆம் ஆண்டு திருப்பி அளித்தார். இது அவரால் முடிந்த எதிர்ப்பு என்றும் பதிவு செய்தார் ராய்.
1997 - The God of Small Things, (தமிழில் - சின்ன விஷயங்களின் கடவுள்) என்ற தனது முதல் நாவலிற்காக சிறப்புக்குரிய 'புக்கர்' பரிசைப் பெற்றார். புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 - சிட்னி அமைதி பரிசு
2015 - அம்பேத்கர் சுடர் விருது. (விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இவ்விருது வழங்கப்பட்டது)
2003 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்துவிட்டார்
பன்முக தன்மை கொண்ட ராய்
அருந்ததி ராய், இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆங்கில நாவல் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவர். முற்போக்கு சிந்தனை கொண்ட இவர், நடிகர், எழுத்தாளர், ஆய்வுக்கட்டுரையாளர், அணு உலை எதிர்ப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
The God of small things என்ற தன்னுடைய படைப்பிற்கு 'புக்கர்' விருதைப் பெற்ற பிறகு உங்கள் அடுத்த புத்தகம் எப்போது என்ற நிருபரின் கேள்விக்கு, நான் அடுத்த புத்தகம் எழுத வேண்டும் என்றால் அது எனக்குள் ஒரு உந்துதலை ஏற்படுத்த வேண்டும். எனது கடைசி புத்தகம் பரிசு பெற்று விட்டது என்பதற்காக நான் என் அடுத்த புத்தகத்தை எழுத மாட்டேன் என்றார் அருந்ததி ராய்.
இந்நாட்டின் அரசியல் அமைப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் வன்முறையும், அரசியல் அதிகாரமுமே அருந்ததி ராயின் எழுத்துக்களுக்கு உந்துதல். அதுமட்டுமின்றி எளிய மக்களின் மீது ராய்க்கு இருக்கும் அன்பே அவரின் பெரிய உந்துதல், அதுவே அவரை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கும்.
இனம் கடந்து, மொழி கடந்து, சாதி, மத வேறுபாடுகளின்றி அன்பும், அமைதியும், மனிதமும் இந்த தேசம் முழுக்கப் பரவும் வரை "குரலற்றவர்களின் குரலாய்" அருந்ததிராயின் எழுத்துக்களும், போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் அருந்ததி ராய் அவர்களுக்கு
பேரன்பும், வாழ்த்துகளும்..!
- அறிவுமதி அன்பரசன்