“கணவனை தீர்த்துக்கட்ட.. 1 லட்சம் பேரம்” - கள்ளக்காதலனோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட மனைவி

அவரது இ-ரிக்ஷாவை முன்பதிவு செய்து தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“கணவனை தீர்த்துக்கட்ட.. 1 லட்சம் பேரம்” - கள்ளக்காதலனோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட மனைவி
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில், 40 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி, அவரின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தார்த் நகர் மாவட்டம் இட்வா பகுதியைச் சேர்ந்த ஹரிச்சந்திரா அக்ரஹரி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, மும்பையிலிருந்து வரும் பயணி ஒருவரை அழைத்து வருவதாக தனது மனைவி மாயாதேவியிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்திய போலீசார், புத்தி ராப்தி ஆற்றின் முச்சோர்வா காட் அருகே ஹரிச்சந்திராவின் மின்சார ஆட்டோவை கண்டுபிடித்தனர். ஆட்டோ அருகே ரத்தக்கறைகள் இருந்ததுடன், ஒரு செல்போனும் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ஆற்றுப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது, பாலம் அருகே ஹரிச்சந்திராவின் உடல் மீட்கப்பட்டது. குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டனர். முதற்கட்டமாக விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகள் அது கொலை என்பதை வெளிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், ஹரிச்சந்திராவின் மனைவி மாயாதேவிக்கும் நியாஸ் அகமது என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர். ஹரிச்சந்திரா மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், போதையில் மனைவியை அடிக்கடி தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மாயாதேவிக்கும் நியாஸ் அகமதுக்கும் இடையேயான உறவு ஆகியவை கொலைக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையின்படி, ஹரிச்சந்திராவை கொலை செய்ய மாயாதேவியும் நியாஸ் அகமதுவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இருவரால் மட்டும் கொலையைச் செய்ய முடியாது என்பதால், இர்ஷாத் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரையும் அணுகியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைக்காக ₹1.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், அதில் ₹60,000 முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி ஹரிச்சந்திராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது இ-ரிக்ஷாவை முன்பதிவு செய்து தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு அவரை கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு, உடலை ஆற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் விபத்து போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவரது மின்சார ஆட்டோவை அப்பகுதியில் நிறுத்தி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப்படை மற்றும் தேபருவா காவல்துறையினர் இணைந்து நடத்திய விசாரணையில், மாயாதேவி, நியாஸ் அகமது, இர்ஷாத் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி மற்றும் செல்போன்களையும் போலீசார் மீட்டுள்ளனர். பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் 103 (1) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com