படிக்க வைப்பதாக அழைத்து சென்று விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட 14 வயது சிறுமி.. விசாரணையில் வெளிவந்த ப்ரொஸ்டிடுட் மாஃபியா!

தனது குடும்பத்தினரிடம் கல்வி கற்பிப்பதாகவும், தனது செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி தன்னை மும்பைக்கு
prostitution
Published on
Updated on
1 min read

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை படிக்க வைக்க உதவுவதாக கூறி மும்பைக்கு அழைத்து வந்து, பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் இரண்டு தம்பதிகள் உட்பட எட்டு பேரை மீரா-பயந்தர், வசாய்-விரார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு முதலில் சிறுமி காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்ததுடன், அதன் பின்னணியில் செயல்பட்டு வந்த பெரிய பாலியல் குற்ற கும்பலும் அம்பலமானது.

காவல்துறையினரின் தகவலின்படி, சஞ்சய் குப்தா என்ற நபர் கடந்த மார்ச் 3ஆம் தேதி பயந்தரில் உள்ள நவகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது பாதுகாப்பில் இருந்த 14 வயது சிறுமி ஹோலி பண்டிகைக்கான பொருட்களை வாங்க வெளியே சென்றபோது காணாமல் போய்விட்டதாகவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், பயந்தர் பகுதியில் அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். பின்னர் பெண் காவல் அதிகாரி ஒருவர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

சிறுமி அளித்த தகவலின்படி, சஞ்சய் குப்தா தனது உறவினர் அல்ல என்றும், ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் கல்வி கற்பிப்பதாகவும், தனது செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி தன்னை மும்பைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு அழைத்து வந்த பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியதுடன், பலமுறை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியதாகக் கூறியுள்ளார். மேலும், விசாரணையில் அந்தச் சிறுமி பாலியல் தொழிலுக்காக ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. பல்வேறு நபர்களிடம் அனுப்பி வைத்து பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த மூத்த காவல் ஆய்வாளர் முகுந்த் யாதவ், “காணாமல் போன சிறுமி தொடர்பான வழக்கை விசாரித்த போது, ஆழமாக வேரூன்றி இருந்தது பாலியல் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் கும்பலை தற்செயலாக கண்டுபிடித்தோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் எட்டு பேருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com