டிராக்டர் மானியத்திற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் ; தாட்கோ மேலாளர் கைது ...!

டிராக்டர் மானியத்திற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் ; தாட்கோ மேலாளர் கைது ...!
Published on
Updated on
2 min read

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தாட்கோ நிறுவனத்தில் டிராக்டர் வாங்க மானிய கடன் உதவி பெறுவதற்கு 15,000 லஞ்சம் வாங்கிய மேலாளர் மற்றும் உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி நடவடிக்கை.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மணியார்குண்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார்.

இதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிலையில், அவரிடம் நேர்காணலும் மேற்கொள்ளப்பட்டது. 
 அதனைத் தொடர்ந்து ₹7.50 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்குவதற்காக ₹15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர் (பொறுப்பு) சாந்தி கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை அறிவுறுத்தல் படி குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மாவட்ட மேலாளர் சாந்தியிடம் கொடுக்க வந்தார்.  அப்போது,  லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர், லுங்கி அணிந்த படி மாறுவேடத்தில் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

 அப்போது குமார், மாவட்ட மேலாளர் பொறுப்பில் உள்ள சாந்தியிடம் இன்று  லஞ்சம் பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது மாவட்ட மேலாளர் பொறுப்பில் உள்ள சாந்தி அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்குமாறு தெரிவித்ததையடுத்து, குமார் அவரிடம் சென்று லஞ்சப்பணத்தை வழங்கினார்.  அப்போது அலுவலகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். 

தொடர்ந்து, மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com