

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம். நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 13,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதன் (40). இவர் கட்டிட காண்ட்ராக்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு திருவிதாங்கோடு பகுதியில் கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வந்தபோது, அப்பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த பிரேமலதன், பின்னர் அவரை வலுக்கட்டாயமாக கேரள மாநிலம் ஆலப்புழா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் மூன்று நாட்கள் சிறுமியை அடைத்து வைத்ததாகவும், அப்போது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு, பிரேமலதனை கைது செய்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பழைய துன்புறுத்தலில் இருந்து பாதுக்காக்கும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா, சாட்சிகள் மற்றும் ஆவண ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர் பிரேமலதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பில், பிரேமலதனை குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.