

திருச்சி மாநகர், அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (19). இவர் அரியமங்கலத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள அந்த பெண் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலைக்காக அவ்வப்போது சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த பெண் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். தொடர்ச்சியாக வேலை இருப்பதால் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என தெரிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேன் உடன் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். மதியம் இருவரும் உணவு அருந்திய பின் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது இருந்த காதலன் சதாம் உசேன், தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவை உதவிக்கு அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து இருவரும் அந்த பெண்ணை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சதாம் உசேன் மற்றும் அவரின் நண்பர் சேக் அப்துல்லா இருவரையும் கண்டோன்மெண்ட் போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் சதாம் உசேனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் காரணமா அந்தப் பெண் அதிக அளவு போதை மருந்து பயன்படுத்தி, மயங்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உணவு அருந்திய பின்பு தான் அந்த பெண் உயிரிழந்ததாக அவருடைய காதலன் சதாம் உசேன் தெரிவித்துள்ளார். இதில் எது உண்மை என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் காவல்துறை துணை ஆணையர் சிருஷ்டி சிங் சதாம் உசேன் மற்றும் சேக் அப்துல்லா இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
போதை மருந்து பயன்படுத்தியதால் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து போதை மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு சதாம் உசேன் மீது உயிரிழந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.