1.80 கோடி மோசடி; சுங்கத்துறை ஆணையர் மீது வழக்கு!

1.80 கோடி மோசடி; சுங்கத்துறை ஆணையர் மீது வழக்கு!
Published on
Updated on
1 min read

பெட்ரோல் பங்க்-கை விற்பதாக கூறி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சுங்கத்துறை ஆணையருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுங்கத் துறை ஆணையர் மனோகரின் மனைவி உமா மகேஸ்வரிக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் அருகே பேரம்பாக்கத்தில் நடத்தி வரும் பெட்ரோல் பங்க்-கை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக கூறி பணத்தை பெற்ற போதும், அதை தனக்கு எழுதித் தராமல் மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, சென்னை முகப்பேரை சேர்ந்தவர் கே.தீபக் காஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த காஞ்சி நீதிமன்றம், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com