

புது தில்லியில் டிசம்பர் 2023-ல், தென்மேற்கு தில்லியைச் சேர்ந்த ஒரு சிறுமி சமூக வலைதளத்தில் அறிமுகமில்லாத ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர், இருவரும் தொலைபேசியில் பேசத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, அந்த நபர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அச்சிறுமியின் நிர்வாணப் படத்தை உருவாக்கி மிரட்டியுள்ளார். மேலும், அந்த நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் படிப்படியாக அவரை அவரது வலையில் சிக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து, அந்த புகைப்படத்தை வைத்து காலப்போக்கில் அவரிடமிருந்து சுமார் 1.2 லட்சம் ரூபாயையும் அந்த மர்ம நபர் பறித்ததாகக் கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளாக அந்த பெண் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெண் இறுதியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்த நபர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தவும் மிரட்டவும் செய்தார் என்பதை அந்த பெண் அதில் விவரித்துள்ளார்.
மேலும் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம், அந்த நபர் தன்னை நேரில் சந்தித்தபோது, தனது புகைப்படத்தைக் காட்டி மிரட்டியதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபரின் அழுத்தத்திற்குப் பணிந்து, அவரின் பணக் கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்தப் பெண் அந்த நபரின் வங்கிக் கணக்கிற்குச் சிறு சிறு தவணைகளாகப் பணத்தை அனுப்பத் தொடங்கியுள்ளார். அந்தப் பணத்தைச் செலுத்த அந்த பெண் தன் தாயின் கணக்கைப் பயன்படுத்தியுள்ளார். பின்னர்தான் அந்த பெண்ணின் தந்தை இந்தப் பணப் பரிவர்த்தனைகளைக் கவனித்து, மகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி அறிந்துகொண்டுள்ளார்.
மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து, அந்த நபர் தொலைபேசியில் அந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைத் திட்டியும் மிரட்டியும் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், அமிலத்தால் அந்த சிறுமியை தாக்குவதாகவும் மிரட்டியதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது பட்டப்படிப்பு படித்து வரும் அந்த மாணவி, ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை ஒரு தொழிலதிபர். உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, அந்த பெண்ணை பின்தொடர்ந்த அஜய் துபே (25) என்பவரை போலீசார் விரைவாகக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் இதற்கு முன்பு இரண்டு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் ஒன்று 2020-ல் நங்லோயில் குற்றவியல் மிரட்டல் மற்றும் கொலைக்கு நிகரான பல குற்றச்சாட்டுகளும், மற்றொன்று 2019-ல் நிஹால் விஹாரில் (குடியிருப்புப் பகுதி) அத்துமீறி நுழைந்து தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காகவும் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்குப் பதிவு செய்த பிறகு, போலீசார் துபேயைக் கண்காணிக்கத் தொடங்கினர். சில நாட்களுக்குப் பிறகு, நீதிமன்ற விசாரணை ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், துபே வேறு சிலரையும் குறிவைத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்