

ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெர்லினுக்கு அருகிலுள்ள பிராண்டன்பர்க் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஹேவல்லேண்ட் கிளினிக்கன் (Havelland Kliniken) மருத்துவமனையில் பணியாற்றிய குழந்தைகள் நல மருத்துவர் ஒருவருக்கு எதிராக 130க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஜெர்மனி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மருத்துவ துறையின் பாதுகாப்பு நடைமுறைகள் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அடையாளம் வெளியிடப்படாத 46 வயதான அந்த குழந்தை நல மருத்துவர், கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 2013 டிசம்பர் 1 முதல் 2025 நவம்பர் 5 வரை இந்தக் குற்றங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பிராண்டன்பர்க் மாநிலத்தின் ரத்தினோ மற்றும் நௌன் நகரங்களில் உள்ள ஹேவல்லேண்ட் கிளினிக்கன் மருத்துவமனைகளில் பணியாற்றியபோது, தனது மருத்துவ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் மீது கடுமையான பாலியல் குற்றங்களை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவற்றில் குழந்தைகள் மீதான கடுமையான பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு மற்றும் பல்வேறு பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அடங்குவதாக போட்ஸ்டாம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், 130 தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை இந்த வழக்கின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த மே 6ஆம் தேதி இந்த குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த மருத்துவர் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது, ரத்தினோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி ஒருவரின் தாய் போலீசில் புகார் அளித்ததையடுத்தே என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பேரில் தொடங்கப்பட்ட விசாரணையில், 2025 நவம்பரில் மருத்துவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது, அவரிடமிருந்து ஏராளமான டிஜிட்டல் தரவு சேமிப்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு, பிரான்சில் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லெ ஸ்கோவர்னெக் வழக்கை மீண்டும் நினைவூட்டியுள்ளது. 1989 முதல் 2014 வரை 298 நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒப்புக்கொண்ட அந்த மருத்துவருக்கு, 2025ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 250க்கும் மேற்பட்டோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்போது ஜெர்மனியில் வெளியாகியுள்ள இந்த வழக்கும் அதேபோன்ற கொடூர மருத்துவ குற்றமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மருத்துவர்களின் பின்னணி ஆய்வு குறித்து ஜெர்மனி முழுவதும் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.