தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வந்த குற்றவாளிகள் 3 பேர் கைது...

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வந்த குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 16 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வந்த  குற்றவாளிகள் 3 பேர் கைது...
Published on
Updated on
2 min read

சென்னையில் கடந்த 18 ம் தேதி இரவு திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

அதேபோல அதற்கு அடுத்த நாளில் அண்ணா சாலை தர்கா பகுதியில் சாந்தி என்ற பெண்ணை தாக்கி 4 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த நாட்களில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவம் நடந்தேறி வந்தது. 

இதனை தடுப்பதற்காக திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அனைத்து செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து எழும்பூர் பகுதிகளிலும் இதே நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்களை பிடிப்பதற்காக எழும்பூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிந்தாதிரிபேட்டை ஆய்வாளர் பத்ம குமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று அதிகாலை சிந்தாதிரிப்பேட்டை பின்னி லிங்க் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரே வாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் செயின் மற்றும் மொபைல் பறிப்பு குற்றவாளிகள் என தெரியவந்தது. 

பின்னர் மூவரையும் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த கிருபாநந்தன்(19) என்றும் மற்றொரு நபர் ஆவடியை சேர்ந்த பால் சிவா (எ) சிவகுமார்(20) என்றும் மூனாவது நபர் அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. 

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், குமரன் நகர், திருவல்லிக்கேணி, எழும்பூர், துரைபாக்கம், செங்குன்றம், சூளைமேடு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கிருபானந்தம் மீது அண்னா நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும், இவர்கள் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு மட்டுமல்லாமல் கடையை உடைத்து திருடுவது, பேட்டரி திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிகளில் ஈடுபடுவது போன்ற அனைத்து வகையான குற்ற சம்பவங்களிலும்  குழுவாகச் சேர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com