“இரவு முழுவதும் சித்ரவதை செய்து.. 3 வயது குழந்தை கொலை” - மிருகத்தனமாக நடந்து கொண்ட தாயின் கள்ளக்காதலன்!

தன்னுடன் வேலை பார்த்த சிவகாசி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய
virudhunagar child murder
Published on
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் அருகே உள்ள சின்னக் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆன்டுகளாகும் நிலையில்  விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. குடிபோதைக்கு அடிமையான துரைப்பாண்டி எப்போதாவது வீட்டிற்கு வருவார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தாய் வீட்டில் தங்கி சுவாதி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். அப்போது சுவாதிக்கு தன்னுடன் வேலை பார்த்த சிவகாசி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து தனது பெற்றோரிடம் கூறிய சுவாதி விக்னேஸ்வரன் உடன் வீடு எடுத்து வாழப் போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுவாதியின் தாய் விக்னேஷுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் விக்னேஷுடன் சேர்ந்து வாழ நினைத்த சுவாதி கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிவகாசி நகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் விநாயகர் காலனி பசும்பொன் நகரில் தனியாக வீடு எடுத்து விக்னேஷுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விக்னேஸ்வரன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல நேற்று இரவு குடும்பத் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், சுவாதியின் 3 வயது மகள் விஷ்ணு பிரியாவை தரையில் சரமாரியாக தாக்கி முடியை பிடித்து இழுத்து இரவு முழுவதும் சித்ரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் விக்னேஷுடன் வாக்குவாதம் செய்த சுவாதி நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் குழந்தையின் உடலை எடுத்து கொண்டு சுவாதி வீட்டிற்கு சென்ற நிலையில் அவரிடம் போலீசில் சென்று சரணடைவதாக கூறிய விக்னேஷ், இருவரும் சேர்ந்து செல்ல ஆட்டோ அழைத்து வருவதாக கூறி தப்பி சென்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தை உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் விக்னேஸ்வரனை கைது செய்த போலீசார், குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட  சம்பவம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com