திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கம்போல் இன்று (ஜூலை 7) அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அருகே நடந்து சென்ற அவரை, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சரத்குமார் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
சில நிமிடங்களில், கவிதாவை வலுக்கட்டாயமாக பூங்காவுக்குள் இழுத்துச் சென்ற சரத்குமார், கொலை மிரட்டல் விடுத்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அதிர்ச்சியடைந்த கவிதா, தப்பித்து நேரடியாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டை அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், புகாரில் கூறப்பட்ட சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் மீது தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், அதிகாலையிலேயே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நகராட்சி பூங்கா அருகே நடைபெற்றிருப்பது திருப்பத்தூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.