பெண் எஸ்.ஐ.க்கு பாலியல் தொல்லை.. மதுபோதையில் அடாவடி செய்த ஆய்வாளர்! 6 மாதத்தில் ₹2 கோடி மாமூல்? வசமாக சிக்கியதன் பின்னணி

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அந்த பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றசாட்டு வைக்கப்படுகிறது.
Sudhakar police inspector
Sudhakar police inspector
Published on: 
Updated on: 
1 min read

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி காவல் நிலையத்தில் கடந்த 6 மாத காலமாக ஆய்வாளர் சுதாகர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், மாட்டு வண்டி பந்தயம், திருவிழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் எதிர் தரப்பினரிடம் அடாவடியாக வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் காவல் ஆய்வாளர் சுதாகர் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுவது, ஆபாசமாக பேசுவது, அடாவடியாக நடந்து கொள்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதத்தில் மட்டுமே ஆய்வாளர் சுதாகர் சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வேம்பாரில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த மூன்று மாதமாக ஆய்வாளர் சுதாகர் தங்கியிருந்துள்ளார். ஆனால் மூன்று மாத காலமாக அந்த லாட்ஜிக்கான வாடகையை அவர் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவர் லாட்ஜ் ரூமில் இருந்து இறங்கி வரும் பொழுது, அந்த ரூமின் வாசலில், டீக்கடையில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பொதுமக்களை பார்த்து "நான் வருகிறேன், எனக்கு வணக்கம் வைக்க உங்களுக்கு தெரியாதா?" என்று கூறியதோடு டீக்கடை உரிமையாளரிடம் "நீ இனிமேல் டீக்கடை முன்பு நாற்காலி போடக்கூடாது" என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஆய்வாளர் சுதாகர் பெரும்பாலான நேரத்தில் மது போதையில் இருந்ததாகவும், ஒரு பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அந்த பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றசாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி சுயம்பு என்பவர் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், சூரங்குடி ஆய்வாளர் சுதாகர் தங்களது ஊர் கோவில் கொடை விழா நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க ரூபாய் 7000 பெற்றுக் கொண்டதையும், மீதித் தொகை ரூபாய் 18 ஆயிரத்தை சூரங்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆறுமுகம், முத்துலிங்கம் ஆகிய காவலர்களை வைத்து கேட்டு மிரட்டி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளரை அதிரடியாக 'பணியிடை நீக்கம்' செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.