
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற பூஜை செய்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ. 62 லட்சம் பணம், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகேயுள்ள ஆலம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்து சிறப்பு பூஜை செய்தால் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒரு கும்பல் பூஜை செய்வதாக நாகமலை புதுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எனவே இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் எஸ்ஐக்கள் கருணாகரன், அருள்பாண்டியன் மற்றும் போலீஸார் வீட்டிற்கு சென்றனர்.
போலீஸாரைக் கண்டதும் பூஜையிலிருந்தவர்கள் நபர்கள் தப்பியோடினர், அந்த தப்பிய கும்பலை சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து பிடித்தனர். இதில், கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் கேரளாவைச் சேர்ந்த காவேரி (31), கருப்பணன் (60), உதயகுமார் (48), அரவிந்தகுமார் (63), சிவன் (65), முத்துமுருகன் (43), விஜயகுமார் (37), ராஜ்குமார், (41) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகள் அடங்கிய ரூ. 62 லட்சத்து 39 ஆயிரம் பணம், மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவான செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.