85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. 24 வயது இளைஞர் கைது! டாஸ்மாக்கை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

பலத்த காயமடைந்த மூதாட்டி உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறியுள்ளார்
krishnagiri old women sexual abuse case
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த முருகம்மாள் (85) தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்து விட்டு அங்குள்ள புளியமரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரிடம் பேச்சு கொடுத்து பின்னர், அவரை தாக்கி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த மூதாட்டி உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறியுள்ளார். இதையடுத்து அவர் முதலில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு பிறப்புறுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து பல தையல்கள் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், குற்றவாளியை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹடிமணி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோரின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது கல்லாவி காமராஜ் நகரைச் சேர்ந்த ரவியின் மகன் சஞ்சய் (24) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சஞ்சயை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி காட்டேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "மது வேண்டாம், எங்கள் கிராமம் வேண்டும்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com