

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் 3 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 65 வயதான பீம்ராவ் காம்ப்ளேவுக்கு மரண தண்டனை விதித்து புனே மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அரிதிலும் அரிதானது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், "இந்தக் குற்றம் நீதித்துறையின் மனசாட்சியை மட்டுமல்ல, சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியது" என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச் சம்பவம் கடந்த மே 1-ஆம் தேதி, புனேவில் நஸ்ராபூர் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. விசாரணையில் குற்றவாளியான பீம்ராவ் காம்ப்ளே, 3 வயது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகவும், புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியை காட்டுவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி தனது உடன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாட்டு கொட்டகைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர், அங்கு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, சிறுமியின் வாயை துணியால் அடைத்து, மார்புப் பகுதியில் கடுமையான காயங்களை ஏற்படுத்தியும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள்கிராமம் முழுவதும் தேடி வந்தனர். சில மணி நேரங்களில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளி பீம்ராவ் காம்ப்ளே, குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின்போது, அரசுத் தரப்பு இந்த வழக்கில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்காக, 'அரிதிலும் அரிதான' வழக்குகளுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய 12 முக்கிய தீர்ப்புகளை அரசுத் தரப்பு மேற்கோள் காட்டியது. குழந்தையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. வழக்கை விசாரித்த புனே மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சலுங்கே, குற்றத்தின் கொடூரம் கருணைக்கு இடமளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். நீதிமன்ற தீர்ப்பில் "இந்தக் குற்றம் கொடூரமாக இழைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஒரு அப்பாவி, ஆதரவற்ற 3 வயது குழந்தை. காமத்தைத் தீர்த்துக்கொள்ள இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது. இது முழுமையான வக்கிர குணத்தை வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்தார். இந்தக் குற்றம் நீதித்துறையின் மனசாட்சியை மட்டுமல்ல, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது” என்றும் குறிப்பிட்டார்.
குற்றவாளியின் வயது 65 ஆனாலும், "இந்த வயதிலும் அவரது காம வேட்கை தணியவில்லை; மாறாக அது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது" என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். காம்ப்ளேவுக்கு ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனால், தனது செயலின் சட்ட விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தும் இந்தக் குற்றத்தை செய்துள்ளார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், குழந்தையின் வயது, குற்றத்தின் கொடூரம், மனிதாபிமானமற்ற தாக்குதல், முந்தைய குற்றப் பின்னணி மற்றும் எந்தவித மனவருத்தமும் இல்லாத நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இது "அரிதிலும் அரிதான" வழக்கு என்பதால் மரண தண்டனை மட்டுமே பொருத்தமான தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
"இந்த வழக்கில் இரவும் பகலும் காவல்துறையினர் பணியாற்றினர். தினசரி விசாரணைகள் நடைபெற்றன. 15 நாட்களிலேயே அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 55 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உணர்வுப்பூர்வமாகவும், விரைவாகவும் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது," என்றார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தத் தீர்ப்பை வரவேற்றார். "இதுபோன்ற குற்றவாளிகளுக்கு சமூகத்தில் இடமில்லை. நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கு பாராட்டுகள். விரைவாக விசாரணை நடத்தி, ஆதாரங்களைச் சேகரித்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறை, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் அரசு வழக்கறிஞர்களின் பணி பாராட்டத்தக்கது," என்று அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான நடவடிக்கையை உறுதிப்படுத்தும் முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.