10 மாணவர்களை சேர்ந்து… “சக மாணவியுடன் பேசியது ஒரு குற்றமா!?” - கொலைவெறிச்செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்..!

மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஆதித்யா சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில்...
a boy killed by fellow school mates
a boy killed by fellow school mates
Published on
Updated on
2 min read

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்தவர் சிவா. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். அவருடைய மனைவி சத்யா. இவர்களுடைய மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இதில் சிவாவின் மகனான ஆதித்யா (17) குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஆதித்யா பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை.

மாலையில் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள பகுதியில் சீருடை அணியாமல் சாதாரண உடையில் ஆதித்யா மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆதித்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை குமலன்குட்டை அரசு பள்ளிக்கூடத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், புகார் கொடுக்க ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு ஆதித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் சென்றனர். அங்கு தங்களது மகனை அடித்துக்கொலை செய்த சக மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்து கதறி அழுதனர்.

மேலும், கைது செய்யும் வரை மகனின் உடலை பெறமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது துக்கம் தாங்காமல் பெண் ஒருவர் மயங்கினார். அவரை உறவினர்கள் ஆசுவாசப்படுத்தினர். அப்போது ஆதித்யாவை கொலை செய்த மாணவர்களை கைது செய்யாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு எனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் சிவா மிரட்டல் விடுத்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அழுதுகொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அவர்களை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்பிரபு, மணிகண்டன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது உறவினர்கள் கூறும் போது, ஆதித்யா பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்ற தகவலை பெற்றோருக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் பள்ளிக்கூட வேலை நேரத்தில் மாணவர்கள் வெளியே வந்துள்ளனர். ஆதித்யாவை 2 மாணவர்கள் தாக்கியதாக போலீசார் கூறி வந்தனர்.

ஆனால் தாக்குதல் வீடியோவை பார்க்கும்போது சுமார் 10 மாணவர்கள் சேர்ந்து ஆதித்யாவை அடித்து கொன்று உள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார் கூறுகையில், "உங்களது புகாரை எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு சமாதானம் அடைந்த அவர்கள் புகார் மனுவை கொடுத்தனர்.

இதையடுத்து ஈரோடு வீரப்பன்சத்திரம் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஆதித்யா சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் ஆதித்யாவிடம் அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 மாணவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்களது வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் பேசக்கூடாது என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மாணவர்கள் தான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள சந்தில் வைத்து ஆதித்யாவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆதித்யா உயிரிழந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.

இதைத்தொடர்ந்து போலீசார் மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com