சிறையிலிருந்து வந்த 4 நாட்களில் கொலைவெறித் தாக்குதல்! அரிவாளால் துண்டிக்கப்பட்ட கை!

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிறையிலிருந்து வந்த 4 நாட்களில் கொலைவெறித் தாக்குதல்! அரிவாளால் துண்டிக்கப்பட்ட கை!
Published on: 
Updated on: 
2 min read

கொலை வழக்கில் சிறைத் தண்டனையை எதிர்கொண்டு வந்த நபர் ஒருவர், சிறையிலிருந்து வெளியே வந்த நான்கே நாட்களில் மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரை, இரண்டு பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், துப்பாக்கியாலும் சுட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் அவரது ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள சிவாஜிநகர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் மந்தர் மருதி கிவாலே (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜராக வந்திருந்தபோது, அங்கு காத்திருந்த இரண்டு பேர் திடீரென அவரைத் தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், இரண்டு நபர்கள் கையில் பெரிய அரிவாள்களை வைத்துக்கொண்டு மந்தர் கிவாலேவை மீண்டும் மீண்டும் தாக்குவது பதிவாகியுள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து இரண்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், கிவாலே சாலையோர நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிகிறது. அவரது ஒரு கை மணிக்கட்டுப் பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அங்கிருந்த சிலர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு தோட்டாக்கள் வைக்கப்படும் மேகசின் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலில் துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளான கிவாலேவின் கடந்தகாலமும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் புனேவின் சந்தோஷ்நகர் காத்ராஜ் பகுதியில் 26 வயதான உணவக உரிமையாளர் சுபம் சுபாஷ் சவான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிவாலே தொடர்புடையவராக இருந்துள்ளார். நிலம் மற்றும் பணம் தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வழக்கில் சுபம் சவான் மீது கிவாலேவும் அவரது கூட்டாளிகளும் மரக்கட்டைகள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக கிவாலே, முக்கியக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமர் சாகோர் மற்றும் கிரிஷ் பாபரே, யோகேஷ் டோரே உள்ளிட்டோருடன் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சம்பவம் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார், புனே காவல் ஆணையரைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, அதுவும் பட்டப்பகலில் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது நீதிமன்றப் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரும் நபர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கவலையும் எழுந்துள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தாக்குதலின் பின்னணியும் குற்றவாளிகளின் அடையாளமும் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்