25 ஆண்டுகளாக சல்மான்கானை கொலை செய்யத் துடிக்கும் பிரபல ரவுடி... பின்னணி என்ன?

25 வருடங்களுக்கு முன்பு மான் வேட்டையாடியதில் இருந்து, சல்மான்கானை கொலை செய்வதற்கு பிரபல ரவுடி, சிறையில் இருந்தவாறே திட்டமிட்டு வருகிறான்
25 ஆண்டுகளாக சல்மான்கானை கொலை செய்யத் துடிக்கும் பிரபல ரவுடி... பின்னணி என்ன?
Published on
Updated on
3 min read

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள சல்மான்கான் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தொப்பி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை நீட்டி சல்மான்கானின் இல்லத்தை நோக்கி கண்மூடித்தனமாக நான்கு முறை சுட்டனர்.

சல்மான்கான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு
சல்மான்கான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு

இந்த சம்பவம் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய மும்பை போலீசார், அஜய் காஷ்யப், கௌதம் வினோத் பாட்டியா, வாஷ்பி, ரிஸ்வான் உசேன், தீபக் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில் காஷ்யப் என்பவனிடம் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அஜய் காஷ்யப்
சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அஜய் காஷ்யப்

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கானை மர்மகும்பல் கொலை செய்ய முயன்று வருவதாகவும், இதற்கு முன்பே பல சம்பவங்கள் அரங்கேறியதாகவும் இந்தியா முழுவதும் தகவல்கள் பரவியது.

இந்த சம்பவம் நடந்த மறுநாளே, மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நேரிலேயே சென்று அரசின் சார்பில் அனைத்து உதவிளையும், பாதுகாப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

அதன்படி சல்மான்கானுக்கு ஒய் பிளஸ் கேட்டகரியில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சல்மான்கானை கொலை செய்ய துடிக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்
சல்மான்கானை கொலை செய்ய துடிக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்

சல்மான்கானை கொலை செய்வதற்காக பிஷ்னாய் என்பவரிடம் இருந்து 25 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் டீலரிடம் இருந்து ஏகே-47, ஏகே-92, எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் துருக்கியில் தயாரிக்கப்படும் ஜிகானா பிஸ்டல் போன்ற அதிநவீன துப்பாக்கிகளை வாங்கினர்.

இதற்காக 60 முதல் 70 பேர் வரையிலான குழுவினர் சல்மான்கானின் வீடு, பன்வெல் பண்ணை வீடு, கோரேகான் பிலிம் சிட்டி போன்ற இடங்களில் நோட்டமிட்டு வந்தனர். அதிலும் சல்மான்கானை கொலை செய்வதற்கு 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் அதிகமாக களமிறக்கப்பட்டது தெரியவந்தது.

அதன்படி சல்மான்கானை துப்பாக்கியால் கொலை செய்த பின்பு, அனைவரும் கன்னியாகுமரி வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்வதே திட்டம். ஆனால் பாந்த்ராவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக அனைவரும் பிடிபட்டனர்.

சல்மான்கான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைதானவர்கள்
சல்மான்கான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைதானவர்கள்

இதில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோர் சித்து மூஸ்வாலா பாணியில் சல்மான்கானை கொலை செய்வதற்கு  திட்டமிட்டிருந்தனர்.

பிரபல பாடகரான சுப்தீப் சிங் சித்து கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதியன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த கொலைச் சம்பவத்தில் பஞ்சாபை சேர்ந்த நிழலுக தாதா லாரன்ஸ் பின்ஷோய் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். மேலும் கனடாவைச் சேர்ந்த பிரபல தாதா சதீந்தர் ஜித்சிங் என்ற கோல்டி ப்ராரின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில் சித்துவை கொலை செய்தது போலவே, சல்மான்கானையும் கொலை செய்வதற்கு திகார் சிறையில் இருந்தவாறே திட்டத்தை அரங்கேற்றியுள்ளான் தாதா லாரன்ஸ் பிஷ்னோய்.

பாலிவுட் நடிகருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே அப்படியென்ன தகராறு என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கலாம். ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காரணம் என கூறினால் நம்ப முடிகிறதா?

1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புதூரில் சல்மான்கான் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்த சல்மான்கான் மான்களை வேட்டையாடினார்.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததைத் தொடர்ந்து சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, இவர்களில் சல்மான் கானுக்கு மட்டும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த மான்வேட்டைதான் சல்மான்கானின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. காரணம், பிஷ்னோய் இன மக்களின் தெய்வமாக கருதப்படும் அபூர்வ வகை மான்களை வேட்டையாடி விட்டார் என பிரபல ரவுடி லாரன்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதற்காக கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்தபோதும், சல்மான்கானை கொலை செய்வதற்காக லாரன்ஸ் அடியாட்களை அனுப்பிக் கொண்டே இருந்தான். அதிலிருந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்தும் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தன.

இவ்வாறு லாரன்ஸ் பிஷ்னோய் கனடாவில் உள்ள தாதா கோல்டி ப்ரார் மற்றும் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோருடன் சேர்ந்து சல்மான்கானை வேட்டையாட திட்டமிட்டு வருகிறான்.

இதில் கோல்டி பிரர் மற்றும் அன்மோல் உத்தரவுக்காகவும், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் வருகைக்காகவும் 70 பேரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தக்க நேரத்தில் போலீசார் நடவடிக்கையில் இறங்கியதால் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com