

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் 9 வயது சிறுமி என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 வயது குழந்தை மற்றும் 16 வயது சிறுவன் மாயமாகியுள்ளனர். குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மட்டும் கால்வாயில் இருந்து உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளான். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் என்ற 45 வயது நபர், தனது மனைவி கவிதா மற்றும் நான்கு குழந்தைகளுடன் கடந்த நவம்பர் 21ஆம் தேதி குஜராத்தின் சூரத் நகருக்குப் புறப்பட்டுள்ளார். குடும்பத்தினர் மருதி ஈக்கோ காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் சூரத் நோக்கிச் சென்றபோது, பார்டோலி தாலுகாவில் உள்ள உவா கிராமம் அருகே மற்றொரு காரில் வந்த நான்கு பேர் அவர்களை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நான்கு பேரும் குடும்பத்தினரை மிரட்டி, அவர்களின் வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குடும்பத்தினரை உகாய் இடதுகரை கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கால்வாயில் வீசியதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக வெளியில் தெரியவில்லை. சம்பவத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்துள்ளான். கால்வாயில் விழுந்தபோது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், அங்கிருந்த குழாய் ஒன்றைப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் போராடியதாகக் கூறப்படுகிறது. பின்னர், நீரிலிருந்து வெளியேறிய அவன் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளான். இதையடுத்து, ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குடும்பத்தினர் பயணம் செய்துகொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த நான்கு பேர் தங்களை வழிமறித்ததாகவும், பின்னர் கால்வாயில் வீசியதாகவும் சிறுவன் தெரிவித்ததாக போலீசார் கூறினர். சிறுவன் அளித்த தகவல்கள் இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளன.
கால்வாயில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் பணியில் நிதின், அவரது மனைவி கவிதா மற்றும் அவர்களது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 2 வயது குழந்தை ஆகிய இருவரையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கவிதாவின் முதல் கணவருக்குப் பிறந்த மகளான 25 வயது குஷி சஞ்சய் பாட்டீல் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அபா, கண்டியோ, பண்டி என அடையாளம் கூறப்பட்ட மூன்று பேர் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடத்தல் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆட்களைப் பிடித்துச் செல்லுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சூரத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காடியா தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் உயிர் தப்பிய சிறுவன் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிப்பதற்காக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கால்வாயில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு குடும்பமே பயணித்துக் கொண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று உயிர்கள் பறிபோன நிலையில், இன்னும் இரண்டு குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களது உறவினர்கள் கவலையில் உள்ளனர். உயிர் தப்பிய சிறுவன் அளித்த தகவல்களை மையமாகக் கொண்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே இந்தச் சம்பவத்தின் முழுமையான பின்னணி தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.