காலையில் திருமணம்... மாலையில் கத்திக்குத்து... மாறி மாறி குத்திக் கொண்ட மணமக்கள்...

பெங்களூரில் திருமண வாழ்க்கையில் இணைந்த சில மணி நேரங்களிலேயே புதுமணத் தம்பதி ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலையில் திருமணம் மாலையில் கத்திக்குத்து என நெஞ்சை பதற வைத்த இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக..
காலையில் திருமணம்... மாலையில் கத்திக்குத்து... மாறி மாறி குத்திக் கொண்ட மணமக்கள்...
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் செம்பரகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். 30 வயதான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லிகிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. ஆரம்பத்தில் பிடிவாதம் பிடிக்கவே, பின்னர் காதலர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதற்கு பெற்றோர் முடிவெடுத்தனர்.

அதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதியன்று காலையில் நவீன்குமார் - லிகிதாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. மாலையில் வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் எனக் கூறிய பெரியவர்கள் அதுவரையிலும் மனம் விட்டுப் பேசட்டும் என தனியறையில் அமர வைத்தனர்.

ஆனால் ஒரே அறையில் தங்கிய புதுமணத் தம்பதிகளுக்குள் திடீரென வாய்த்தகராறு எழுந்தது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டதால் வெளியே உள்ளவர்களுக்கு இருவரும் சண்டை போடும் சத்தம் மட்டுமே கேட்டது.

ஒரு கட்டத்தில் இருவரது அலறல் சத்தமும் அதிகமாகவே, உறவினர்கள் கதவை உடைக்க முயன்றனர். ஆனால் உள்ளே இருந்த தம்பதியர் பழங்கள் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து மாறி மாறி குத்திக் கொண்டனர்.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் சரிந்து விழுந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அதிக ரத்தப்போக்கின் காரணமாக லிகிதா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த நவீன்குமாருக்கு ஜாலப்பா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

திருமணம் நடந்து முடிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நிலவியதால் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

காலையில் திருமணம், திருமணம் முடிந்த கையோடு, மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த காதல் தம்பதி, திடீரென ஏற்பட்ட தகராறில் மாறி மாறி கத்தியால் குத்தி உயிரிழந்த இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com