சதுரங்கவேட்டை பாணியில் சம்பவம்... கலசத்தில் முதலீடு... கோடிக்கணக்கில் லாபம்... திமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது...

இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் அதிக பணத்தை அள்ளலாம் என்ற வாக்குறுதியை நம்பி, லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளார் மதுரையைச் சேர்ந்த ஒருவர். சதுரங்கவேட்டை பட பாணியையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்...
சதுரங்கவேட்டை பாணியில் சம்பவம்... கலசத்தில் முதலீடு...
கோடிக்கணக்கில் லாபம்... திமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது...

சதுரங்கவேட்டை படத்தில் ரைஸ்புல்லிங் எனும் அரியவகை இரிடியம் குறித்து பேசி கோடிக் கணக்கில் மோசடி செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தை அருகில் வைத்திருந்தால் அதிலிருந்து கிடைக்கும் பாசிட்டிவ் எனர்ஜியின் மூலம் வாழ்க்கையே வேற லெவல் போய்விடும் என்று கூறுவதைத்தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் கலசத்தை வாங்குவதற்கு கூட தேவையில்லை, கலசத்தின் மீது முதலீடு செய்தாலே போதும் பணம் கோடி கோடியாய் கொட்டும் என அள்ளி விட்ட கப்சாக்களை நம்பி ஏமாந்து போனவர்தான் மதுரையைச் சேர்ந்த தெய்வேந்திரன்.

மதுரை மாநகரின் தெற்குத் தெருவில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த தெய்வேந்திரனுக்கு கலைச்செல்வி என்ற பெண்மணி அறிமுகமானார்.

DD2

தெய்வேந்திரனுக்கு தெய்வ பக்தியும், கூடவே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்த நிலையில், கலைச்செல்வியிடம் இருந்து அட்டகாசமான ஆஃபர் ஒன்று வந்தது.

இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் போட்ட பணத்தை விட 10 மடங்கு லாபம் கிடைக்கும் என்று கலைச்செல்வி கூறியுள்ளார். இரிடியம் என்றாலே வெறும் ஏமாற்று வேலைதானே என முன்கூட்டியே கூறினாலும், கலைச்செல்வி பலப்பல கதைகளைக் கூறி நம்ப வைத்தார்.

இதையடுத்து கலைச்செல்வி மூலமாக தெய்வேந்திரனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தி.மு.க. நிர்வாகியான முகமது ரபி, தெய்வேந்திரனை மதுரையில் சந்தித்து, அவரிடம் இருந்து முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து பல்வேறு தவணைகளில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும், மொத்தம் 18 லட்ச ரூபாய் வரை கொடுத்தார். இதனிடையே முகமது ரபி, கலைச்செல்வி அழைப்பின் பேரில், இரிடியம் டீல் மீட்டிங்கில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் தெய்வேந்திரன்.

DD2

அங்கு பிரமாண்ட ரெசார்ட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டதைப் பார்த்து லயித்துப் போனார். அந்த சந்திப்பின்போது பேசிய முகமது ரபி, இன்னும் சில நாட்களில் அனைவரையும் மும்பை அழைத்து செல்ல இருப்பதாகவும், அங்கு வைத்து பணம் பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதில் தெய்வேந்திரனுக்கு 20 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என ஆசையைக் காட்டிய முகமது ரபியும், கலைச்செல்வியும், மேலும் 5 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டனர்.

இறுதி வரை இரிடியத்தை கண் முன்பே காட்டாததால் சந்தேகமடைந்த தெய்வேந்திரன், தனக்கு கோடிக் கணக்கில் எல்லாம் வேண்டாம், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும் என கூறினார்.

ஆனால் முகமது ரபியும், கலைச்செல்வியும், தெய்வேந்திரனிடம் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதையடுத்து தெய்வேந்திரன் அளித்த புகாரின் பேரில், தெற்குவாசல் காவல் நிலைய போலீசார் திமுக நிர்வாகியான முகமது ரபி, மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

20 கோடி ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இல்லாத கலசத்தின் மீது மோசடி செய்து லட்சக்கணக்கில் ஏமாந்து போனவர்களில் தெய்வேந்திரன் மட்டுமல்ல, நூற்றுக்கும் அதிகமானோர் தவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com