கணக்கு தேர்வு பயத்தில் தீக்குளித்த மாணவி...!!

கணக்கு தேர்வு பயத்தில் தீக்குளித்த மாணவி...!!
Published on
Updated on
1 min read

சென்னை மணலியில்  பத்தாம் வகுப்பு    படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்.  இவர் வெல்டர் வேலை செய்து வருகிறார்.  இவரது மகள் ராஜஸ்ரீ மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பரீட்சை நடைபெற உள்ள நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் திருவொற்றியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டனர். 

அப்போது மாணவியிடம் பெற்றோர்கள் நாளை நடைபெறவுள்ள கணக்கு பரீட்சைக்கு நன்றாக படிக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளனர்.  ஏற்கனவே கணக்கு பாடத்தில் வீக்காக இருந்த மாணவி  பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு  சென்றவுடன் சிறிது நேரத்தில் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அவரது உடல் மீது ஊற்றிக் கொண்டுள்ளார்.  தீ பற்றியதும் அலறி துடித்த மாணவியின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாணவி ராஜ ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பரிட்சைக்கு பயந்து தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று விசாரித்து வருகின்றனர்.  பரிட்சைக்கு பயந்து 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com