ஒரே வீட்டில் நடந்த திகிலூட்டும் சம்பவம்! நள்ளிரவில் நகர்ந்த பொருட்கள், மர்மக் குரல்... இங்கிலாந்தில் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டு பகுதியில் 284 கிரீன் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் பெக்கி ஹாட்ஜ்சன் என்ற பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஒரே வீட்டில் நடந்த திகிலூட்டும் சம்பவம்! நள்ளிரவில் நகர்ந்த பொருட்கள், மர்மக் குரல்... இங்கிலாந்தில் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
Ai Image
Published on: 
Updated on: 
2 min read

இரவு நேரம்... வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென படுக்கையறையில் ஏதோ பொருள் நகரும் சத்தம் கேட்கிறது. எழுந்து பார்த்தால் யாருமே இல்லை. மீண்டும் படுக்கச் செல்லும்போது சுவருக்குப் பின்னால் தட்டும் சத்தம். வீட்டில் இருக்கும் பொருட்கள் தானாக நகரத் தொடங்கினால் எப்படி இருக்கும்? இதுபோன்ற ஒரு விசித்திரமான அனுபவத்தைத்தான் 1977ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. ஒரு சாதாரண வீட்டில் தொடங்கிய இந்தச் சம்பவம், பின்னர் உலகம் முழுவதும் பேசப்பட்ட மர்ம நிகழ்வாக மாறியது.

இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டு பகுதியில் 284 கிரீன் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் பெக்கி ஹாட்ஜ்சன் என்ற பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பெக்கியின் குழந்தைகளான ஜேனட் மற்றும் ஜான் ஆகியோர் படுக்கையறையில் ஏதோ உரசும் சத்தத்தைக் கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களது தாயார் அறைக்குள் வந்தபோது, சுவரில் தட்டுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அப்போது அறையில் இருந்த இழுப்பறை கொண்ட மர அலமாரி யாருடைய உதவியும் இல்லாமல் சுமார் 18 அங்குலம் நகர்ந்ததாகக் கூறப்பட்டது. மீண்டும் அதை பழைய இடத்தில் வைத்தபோதும் அது நகர்ந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் அருகில் வசித்த நோட்டிங்ஹாம் குடும்பத்தினரின் உதவியை நாடினர். அவர்களும் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது சுவர்களில் இருந்து தட்டும் சத்தம் கேட்டதாகக் கூறினர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறை பெண் அதிகாரி கரோலின் ஹீப்ஸ், வீட்டில் இருந்த நாற்காலி ஒன்று யாருடைய உதவியும் இல்லாமல் தரையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி தூரம் நகர்ந்ததைப் பார்த்ததாகப் பின்னர் வாக்குமூலம் அளித்தார். அந்தப் பொருள் எதனால் நகர்ந்தது என்பதை அவரால் கண்டறிய முடியவில்லை என்று விசாரணைப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த சிறிய கண்ணாடிக் குண்டுகள், குழந்தைகள் விளையாடும் லெகோ பொம்மைகள் போன்றவை திடீரெனப் பறந்து வந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. கதவுகள் தானாகத் திறந்து மூடுவது, பொருட்கள் இடம் மாறுவது, வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மர்மமான தட்டும் சத்தங்கள் கேட்பது எனப் பல நிகழ்வுகள் தொடர்ந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தத் தகவல் செய்தியாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கு சென்ற செய்தியாளர்கள் சிலரும் பொருட்கள் பறந்து வந்ததைப் பார்த்ததாகக் கூறினர். ஒரு புகைப்படக் கலைஞரின் நெற்றியில் லெகோ பொம்மை ஒன்று வந்து பட்டதாகவும் விசாரணைக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த அமானுஷ்ய நிகழ்வுகள் ஆராய்ச்சி அமைப்பான சொசைட்டி ஃபார் சைக்கிக்கல் ரிசர்ச் (Society for Psychical Research) சார்பில் மோரிஸ் கிராஸ் மற்றும் கை பிளேஃபேர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வீட்டுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாகச் சென்று ஆய்வு செய்தனர். மொத்தம் சுமார் 180 முறை அந்த வீட்டுக்குச் சென்றதுடன், 25 முறை இரவு முழுவதும் அங்கே தங்கி கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவங்கள் தொடர்பான ஒலி பதிவுகள் 180 மணி நேரத்திற்கும் அதிகமாகச் சேகரிக்கப்பட்டன. இதனால் இந்த நிகழ்வு அமானுஷ்ய சம்பவங்களை ஆராய்பவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியான திருப்பம் ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்த சிறுமி ஜேனட்டின் குரல் திடீரென மாறி, வயதான ஆண் ஒருவர் பேசுவது போன்ற கரகரப்பான குரல் கேட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் குரல் தன்னை 'பில் வில்கின்ஸ்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டதாகவும், அந்த வீட்டில் முன்பு வாழ்ந்த ஒருவர் என்று கூறியதாகவும் விசாரணையாளர்கள் பதிவு செய்தனர். குறிப்பாக, தான் பார்வையை இழந்ததாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வீட்டின் கீழ்தளத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே உயிரிழந்ததாகவும் அந்தக் குரல் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. பின்னர் அந்த வீட்டில் முன்பு வசித்த வில்கின்ஸ் என்ற நபர் அங்கேயே உயிரிழந்திருந்த தகவல் தெரியவந்ததாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.